தஞ்சாவூர்: தஞ்சாவூர் வழியாக திருச்சி - சென்னை இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வரும் 11ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது. மேலும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழனிக்கு நேரடி ரயிலும் விரைவில் இயக்கப்படும் என்று தஞ்சாவூர் எம்.பி., முரசொலி தெரிவித்தார்.
நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தினோம்
தஞ்சாவூரில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி., முரசொலி நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மக்களின் நீண்ட நாள் ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக, ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் நான் நான்கு முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்தேன்.
மேலும், மத்திய ரயில்வே துறை அமைச்சர், நிர்வாக குழு தலைவர், தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு பகல்நேர இன்டர் சிட்டி ரயில் இயக்குவது, திருச்சி - பாலக்காடு, திருச்சி - ஹவுரா ரயில்களை தஞ்சாவூரில் இருந்து இயக்க வேண்டும். மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதி மக்களுக்காக கம்பன் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
தாம்பரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக செல்லும் ராமேஸ்வரம் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைளை வைத்தோம். இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் கடிதம் மூலம் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், மூன்று இடங்களில் ஒரு நிமிட நிறுத்தம் தொடர்பாக கேட்கப்பட்டு இருந்தது. இதில் செஹந்தரபாத் – ராமநாதபுரம் ரயிலை பேராவூரணியில் ஒரு நிமிடம் நிறுத்தவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை- தாம்பரத்துக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கம்
நமது கோரிக்கை அடிப்படையில், திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்துக்கு திங்கள் கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து இதர நாட்களில் பகல்நேர இன்டர் சிட்டி ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். வரும் 11ம் தேதி முதல் மூன்று மாதம் இந்த ரயில் சோதனை ஓட்டமாக திருச்சியில் அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு காலை 6:25 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், திண்டிவனம், விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு மதியம் 12.35 மணிக்கு சென்றடையும்.
பின்னர் மறுமார்க்கத்தில் இருந்து மாலை 3:35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து ரயில் புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு தஞ்சாவூருக்கும், 11.35 மணிக்கு திருச்சிக்கும் சென்றடையும் என தெரிவித்துள்ளனர். இதை சோதனை ஓட்டமாக இல்லாமல் தொடர்ந்து இயக்க கோரிக்கை வைத்துள்ளோம். மக்கள் பயன்பட்டினை பொறுத்து தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழனிக்கு நேரடி ரயிலும் விரைவில் கிடைக்கும்
மேலும், திருச்சியில் இருந்து பழனி வழியாக செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை தஞ்சாவூரில் இருந்து இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தஞ்சாவூரில் சிக்னல் இடர்பாடுகள் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் வழியாக பாலக்காடு ரயிலை இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக ரயில்வே துறையில் கூறியுள்ளனர். கூடிய விரைவில் அந்த ரயில் நமக்கு கிடைக்கும்.
விரைவில் எம்பி., அலுவலகம் திறப்பு
தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டனா குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலுவலகம் தொடர்பான மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. கூடிய விரைவில் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.