விடுதிகளுக்கு ரூ.10 கோடி நிதி... மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கொடுத்த அப்டேட்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த 15 நபர்களுக்கு சீர்மரபினர் நலவாரிய அட்டையினை வழங்கினார்.

தஞ்சாவூர்: தமிழகத்தில் உள்ள 1371 மாணவ- மாணவிகள் விடுதிகளை மேம்படுத்த முதல் கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக ரூ.50 கோடி கேட்டுள்ளோம். தற்போது மாணவ- மாணவி விடுதிகள் முழுமையாக பராமரிக்கும் பணி நடந்து வருகிறது அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியம் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய தலைவர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய தலைவர் மெய்யநாதன் தலைமையில் சீர்மரபினர் நல வாரியம் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சீர்மரபினர் நல வாரியம் துணைத் தலைவர் இராச.அருண்மொழி, சீர்மரபினர் நல வாரியம் ஆணையர், உறுப்பினர் செயலர் சம்பத், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் , மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), அசோக்குமார் (பேராவூரணி), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்படோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி. சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த சீர்மரபினர் நல வாரியம் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பதிவு பெற்ற பெண் உறுப்பினரின் மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி வாங்குவதற்கு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஈமச்சடங்கு உதவித்தொகை. விபத்து உதவித்தொகை வழங்குதல் தொடர்பாகவும் மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. நலவாரிய உறுப்பினர் சேர்க்கையினை மாவட்டங்களில் அதிகரிக்க செயலாக்க திட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம் தொடர்பாகவும், மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட முகாம்களின் விவரங்கள் தொடர்பாகவும், இம்முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் விவரங்களின் குறித்தும், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட விவரங்கள் குறித்தும், இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு சம்மப்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய தலைவர் மெய்யநாதன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த 15 நபர்களுக்கு சீர்மரபினர் நலவாரிய அட்டையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் ராஜ்குமார் , பசுவை சக்திவேல், கணேசன், கதிர்வேல், பண்ணப்பட்டி கோவிந்தராஜ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஸ்ரீதர், அனைத்து மாவட்டங்களின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிக்சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர்களை 50 ஆயிரமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டில் 15 மாவட்டங்களில் 2017 சீர் மரபினர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதில் 10 ஆயிரம் பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 1371 மாணவ- மாணவிகள் விடுதிகளை மேம்படுத்த முதல் கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக ரூ.50 கோடி கேட்டுள்ளோம். தற்போது மாணவ- மாணவி விடுதிகள் முழுமையாக பராமரிக்கும் பணி நடந்து வருகிறது . விரைவில் கட்டிடங்கள் அனைத்தும் பராமரித்து புதிய கட்டிடத்தில் இயங்கும். ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும். அப்போதுதான் அது முழுமைப்பெறும். மாநில அரசு நடத்தினால் அது முழுமை பெறாது. கடந்த 2021 இல் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை நடத்தவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பல நல்ல திட்டங்களை பார்த்து அதனை பிற மாநில முதலமைச்சர்கள் கொண்டு வருகிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் கிடைத்த அபாரமான வெற்றிக்கு முதலமைச்சரின் நல்ல ஆட்சியே காரணமாகும். இதற்கு மக்கள் நன்றி செலுத்தும் விதமாக ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளரை வெற்றி பெற செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.