தஞ்சாவூர்: வெடி விபத்துகளைத் தடுக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார். 


அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்து தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த வெடி விபத்தில் காயமடைந்த தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரைச் சேர்ந்த சுந்தர் (21), சந்துரு (21), அனித்குமார் (27), திருவையாறைச் சேர்ந்த பாஸ்டின் (42), அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்த முருகானந்தம் (20), மஞ்சமேட்டைச் சேர்ந்த கருப்பையா (33), வெற்றியூரைச் சேர்ந்த கார்த்தி (22) ஆகிய 7 பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாஸ்டின், கார்த்தி, சுந்தர், முருகானந்தம் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் வெடி விபத்தில் காயமடைந்த இவர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் பலத்த காயமடைந்த 4 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண உதவியும், காயமடைந்த 3 பேருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவித்தொகையையும் வழங்கினர்.


பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சி.வி. கணேசன் கூறியதாவது: வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயமடைந்த 7 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும், முதல்வர் மு.க. ஸ்டாலின், எங்களை அனுப்பி காயமடைந்தவர்களுக்கும், இறந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறி நிவாரண உதவித்தொகை வழங்குமாறு உத்தரவிட்டார். அதன்படி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.




இது போன்ற விபத்துகளைத் தடுக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர், தீயணைப்பு அலுவலர், தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர், வெடிமருந்து துறை இணை இயக்குநர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விபத்து நடைபெறாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி அந்த குழுவினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் கணேசன்.


அப்போது மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


இந்நிலையில் அரியலூர் மாவட்டம்  திருமானூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகானந்தம் திங்கள்கிழமை நேற்று இரவு உயிரிழந்தார். இதனால், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.