தஞ்சாவூர் அருகே கண்டியூரில் கால்நடை மருந்தகக் கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள், மனுக்களை தொடர்ந்து, கடந்த ஆண்டு மக்கள் நலனுக்கான பல்வேறு அடிக்கல்லை முதல்வர் நாட்டினார். இதேபோல, ஏறத்தாழ 40,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மனுக்கள் அடிப்படையிலும், மாவட்ட நிர்வாகத்துக்கு வருகிற கோரிக்கைகள் அடிப்படையிலும் அந்தந்த பகுதிக்குத் தேவையான கட்டடங்களை, குறிப்பாக விவசாயிகளுக்குத் தேவையான கட்டடங்களைத் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதன்படி பூதலூர், திருவையாறு, பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் ரூ. 2.27 கோடி மதிப்பில் அங்கன்வாடி உள்பட 9 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்து, கட்டுமான பணி முடிவடைந்த கட்டடங்களையும் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இதுபோல, மக்களுக்குத் தேவையான பணிகளைத் தமிழக அரசு உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புயலுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைவரும் அறிந்துள்ளனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய அளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலும் புயல் வருவதற்கு முன்பும், மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படும்போதும் எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். மழை பெய்தால் பள்ளியில் தண்ணீர் தேங்காதவாறு ஒன்றிய அலுவலகம் மூலம் மோட்டார்களை தயார் நிலையில் வைப்பது, இடியும் நிலையிலுள்ள சுற்றுச்சுவரை அகற்றுவது என்பன போன்ற பள்ளிக் கல்வித் துறை நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளைச் செயல்படுத்தி வருகிறோம்.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எந்தவொரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்காகவே செய்யப்படுகிறது. அதேசமயம் விவசாயிகள் பாதிக்காத வகையிலும் மேற்கொள்ளப்படுகிறது. திருவையாறு புறவழிச்சாலை திட்டத்தில் இரண்டு, மூன்று தரப்பில் ஒவ்வொரு கருத்துகளைக் கூறுகின்றனர். இத்திட்டம் வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் வேண்டாம் என தெரிவிக்கின்றனர்.
இந்த அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது. எனவே, கண்டிப்பாக மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் அமர்ந்து பேசி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகத் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பூதலூர், திருவையாறு, பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு எம்எல்ஏ., துரை. சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.