தஞ்சாவூரில் 1330 திருக்குறளையும் படித்த மாணவ, மாணவிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  மலர் துாவி வாழ்த்தினார். தஞ்சாவூர் மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் 36 மாணவ, மாணவிகள் ஏற்கெனவே 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தனர். இவர்களும், திருக்குறள் மனப்பாடம் செய்து வரும் 10 மாணவ, மாணவிகளும், உலகத் திருக்குறள் பேரவையினரும் தஞ்சாவூருக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.


அதில், திருக்குறள் முழுமையும் மனப்பாடம் செய்த மாணவ, மாணவிகளுக்குத் தமிழ்நாடு அரசின் பரிசுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையில் பதிவு செய்துள்ளோம். இவர்களில் 6 பேருக்கு மட்டும்  10,000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. எஞ்சிய 30 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்களுடைய எதிர்கால கல்வி வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசின் பரிசுத்தொகையை விரைவாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் தினந்தோறும் திருக்குறளை அனைத்து மாணவர்களும் படித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். அனைத்து பள்ளி கூட சுவர்களில், திருக்குறள் வாசகம் எழுதுவதோடு மட்டுமில்லாமல் அதன் தெளிவுரையையும் எழுத வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் திருக்குறளை எழுதி வைக்க வேண்டும்.




தஞ்சாவூர் மாநகரின்மையப்பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும், திருக்குறள் நெறி பரப்பும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கவும் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அப்போது, திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகள் மீது அமைச்சர் மலர்கள் தூவி வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன், மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளித் தாளாளர் கே.பி. அறிவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




இது குறித்து பேரவை நிர்வாகிகள் கூறுகையில், உலகப்பொதுமறையான  திருக்குறளை அனைத்து மாணவர்கள் இடத்திலும் கொண்டு செல்லும் வகையில், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். இப்பள்ளி மாணவர்கள் 1330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்கள். இதே போல் தற்போது ஏராளமான மாணவர்கள், திருக்குறளை படித்து மனனம் செய்து வருகின்றனர். மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தினம் ஒரு குறளை அதன் பொழிப்புரையுடன் படித்து மனப்பாடம் செய்தால், அனைத்து திருக்குறளையும் முடித்து விட முடியும். திருக்குறள் படிப்பதினால், மாணவர்களிடத்தில் ஒற்றுமை, போட்டி, பொறுமை இல்லாமலும், கல்வி தரம் உயர்வதுடன், நல்ல எண்ணம் வளரும், பெரியோர் மற்றும் ஆசிரியர்களிடம் மரியாதையும் ஏற்படும். எனவே, அனைத்து மாணவர்களும் கட்டாயம் திருக்குறளை படித்து, மனப்பாடம் செய்தால், அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்றனர்.