தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்படவுள்ள புத்தகத் திருவிழாவில் 110 அரங்குகளில் ஏறத்தாழ 50,000 தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. இந்த புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகளைப் பங்கேற்கச் செய்து, புதிதாக வாசிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் நாளை புத்தகத் திருவிழா தொடங்கி, வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பான அழைப்பிதழை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் வெளியிட்டார். தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது இதற்காக 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50, 000 தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறுகின்றன. புத்தகத் திருவிழா தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.
காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும். மாலை 4 மணி முதல் ஆறு மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அதை தொடர்ந்து நகைச்சுவை சிந்தனை அரங்கம் நடைபெறுகிறது. இதில் தொலைக்காட்சி புகழ் கோபிநாத், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, மதுக்கூர் ராமலிங்கம், ஈரோடு மகேஷ், பர்வீன் சுல்தானா, மோகனசுந்தரம், பாரதி பாஸ்கர், ஞானசம்பந்தம் புலவர் ராமலிங்கம் ஆகியோரின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடைபெறவில்லை கடந்த 2019ம் ஆண்டு நடந்த புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனையாகின தற்போது இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது புத்தகத் திருவிழாவில் 10 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி வாகனங்கள் மூலம் மாணவ, மாணவிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகளைப் பங்கேற்கச் செய்து, புதிதாக வாசிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
புத்தகம் விற்பனை ஒருபுறம் இருந்தாலும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு புத்தகம் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் நோக்கமாகும். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
அப்போது, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கச் (பபாசி) செயலர் எஸ்.கே. முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர். வாசிக்கும் பழக்கம் அருகி வரும் இக்காலத்தில், இப்பழக்கம் உடைய சிலருக்கு துணையாக இருப்பது நூலகங்கள்தான். பரந்து பட்ட அறிவைப் பெற பல்துறை புத்தகங்களையும் வாசிப்பது அவசியம் என்பது கற்றறிந்த பெரியவர்களின் கருத்து. வாசிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலேயே வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமை. எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தஞ்சையில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.