திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட காட்டுக்காரத் தெருவில் வசிக்கும் பொற்செழியன் என்பவர் மைதா மாவு மொத்த விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தனது வீட்டின் கீழ் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். தற்பொழுது அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் காலி செய்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருக்கிறது.


பட்டப்பகலில் பைக் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல். 


பொற்செழியன் தனது குடும்பத்துடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் முதல் தளத்தில் வீட்டு பிளம்பிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், சம்பவத்தன்று அங்கு பொற்செழியன் நின்று வேலையை கவனித்து கொண்டிருந்தார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர் அலுவலக வேலை காரணமாக பொற்செழியன் வண்டியை வெளியில் எடுத்து சென்று வந்து ஷெட்டில் விட்டுவிட்டு அவரது பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார்.


அப்போது அவரது வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்த இரண்டு நபர்கள் பைக்கை நோட்டமிட்டனர். அதில் ஒருவன் வெளியில் நின்று கொள்ள ஒருவன் மட்டும் உள்ளே நுழைந்து பைக்கில்  இருந்த டியூப்பை எடுத்து மேசை மீது வைத்து விட்டு பைக்கில் ஏறி அமர்ந்து காலால் தள்ளிக்கொண்டே வெளியில் செல்கிறான்.இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன. 




ஒரு மணிநேரம் கழித்து, மாடியில் வேலை முடிந்து கீழே இறங்கி வந்த பொற்செழியன் தனது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த தனது அலுவலக பணியாளரிடம் கேட்ட பிறகுதான்  வண்டி திருடப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளார். பின்னர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தார். அதில் பைக்கை ஒருவன் எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. திருவாரூர் நகரப் பகுதியில் பட்ட பகலில் இந்த திருட்டு நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இது குறித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பொற்செழியன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து நகர காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் மற்றும் திருவாரூர் நகரப் பகுதிகளான நெய்விளக்கு தோப்பு, மடப்புரம், காட்டுக்காரத் தெரு வடக்கு வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டு என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகாரை வாங்குவதில்லை என்றும், மேலும் புகாரை பெற்றுக் கொண்டாலும் காவல்துறையினர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். என்னை காவல்துறையினர் கூறிய நடவடிக்கை எடுத்து இது போன்ற திருட்டு சம்பவங்களில் உடனடியாக வழக்கு பதிவு செய்து  மக்களுக்கு காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.