மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் இன்று சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் ஒன்றாக மயிலாடுதுறை ஆதிதிராவிடர் நலத்துறை  மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.  குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள்  ஜவாஹிருல்லா, மாரிமுத்து சிந்தனைச் செல்வன், பூண்டி கலைவாணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் லலிதா  உள்ளிட்டோர் இந்த ஆய்வின்போது உடன் இருந்தனர்.




அப்போது விடுதியில் குடிநீர் தரம் மோசமாக இருப்பதாகவும், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பல மாதங்களாக வேலை செய்யவில்லை என்றும், விடுதி பராமரிப்பு பணி சரிவர மேற்கொள்ளவில்லை என்றும், கட்டுமான பணியில் குறைபாடு இருப்பதால் சுவற்றுக்கும் ஜன்னலுக்கும் இடையே இடைவெளி உள்ளது. இதை கூட அதிகாரிகள் சரி செய்யவில்லை என்று அனைவர் முன்னிலையிலும் ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி படிக்கும் விடுதியில் இரவு காவலர் பணி காலி இடமாக உள்ளதாக அப்போது விடுதி பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.




மேலும், முதலுதவி பெட்டியில் செல்போன் சார்ஜர்கள் வைத்திருப்பதாகவும், மோசமான பராமரிப்பில் உள்ளதற்கு இது ஒரு சான்றாக உள்ளதாகவும் தெரிவித்த குழு உறுப்பினர்கள், விடுதியில் பொறுப்பாளர்கள் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுவெளியில் கண்டிப்புடன் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது, இதனை கேட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலக்கமடைந்தனர்.




மயிலாடுதுறை ஆய்வு வந்த தமிழக  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்  தலைவரும், தமிழக சட்டமன்ற பொது கணக்கிட்டு குழு தலைவருமான செல்வப் பெருந்தகை முன்னதாக மயிலாடுதுறையை அடுத்த தருமபுர ஆதீன மடத்தில், ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு மடத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.




தொடர்ந்து மடத்தின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, தருமபுர ஆதீனம்  சமயப் பணிகளுடன் பல்வேறு பொதுநல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கல்விப் பணிமட்டுமின்றி கொரோனா காலத்தில் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதன் மனாதிபதியை சந்தித்தது இன்று மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார் தொடர்ந்து பொங்கல் கரும்பு வழங்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த திரு செல்வப் பெருந்தகை, நான் முன்னமே இதுகுறித்து முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தேன். 




தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவில் ஆயிரம் ரூபாய் பணத்துடன் சேர்த்து பொங்கல் கரும்பு வழங்க வேண்டும் அதற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் தமிழக அரசில் உள்ளது எனவே காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக கொள்முதல் செய்து பொங்கல் கரும்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணத்துடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கையாகும் என்று கூறினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார் மற்றும் சட்டமன்ற  அதிகாரிகள் உடன் இருந்தனர்.