சப்த விட தலங்களில் ஒன்றான திருக்குவளை தியாகராஜசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்:மீட்கப்பட்டு, நீதிமன்றத்திலுள்ள  மரகத லிங்கத்தை  கோவிலுக்கு மீண்டும் கொண்டு வர தருமபுர ஆதினத்தின் 27வது குருமகா சன்னிதானம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.

 

மாயமாகி மீட்கப்பட்ட 400 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை கும்பாபிஷேகத்திற்கு கோவிலுக்கு கொண்டு வர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் தருமபுர ஆதீன சன்னிதானம் கோரிக்கை.

 

சப்த விட தலங்களில் ஒன்றான,தருமபுர ஆதினத்திற்கு  சொந்தமான திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

கடந்த 1999 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில்  23 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. தருமபுர ஆதினத்தின் 27வது குருமகா சன்னிதானம்  ஶ்ரீல ஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை துவங்கி வைத்தார்.

 



 

 

பாலாலயத்தையொட்டி கணபதி ஹோமம்,வாஸ்து பூஜை கும்ப அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடத்து, புனித நீர், விமான படங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து குருமகா சன்னிதானம் சுந்தரர் நிலையத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், கோவில் திருப்பணிக்கான நன்கொடையாளர்கள் தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி கும்பாபிஷேக திருப்பணியை விரைந்து முடிக்க உதவிட வேண்டும் என்றார்.



 

மேலும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரில் அமைந்துள்ள இக்கோவிலில் காணாமல் போன சுமார் 400 கோடி மதிப்பிலான மரகதலிங்கத்தை தற்போது கண்டுபிடிக்கப்பட்டு, அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தனி கவனம் செலுத்தி மரகத லிங்கத்தை கண்டுபிடித்து கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவர்  கும்பாபிஷேகத்திற்குள்  மரகத லிங்கத்தை ஆலயத்திற்கு வழங்க வேண்டுமென்ற எதிர்பார்பு உள்ளதாக  தமிழக முதல்வருக்கு தனது கோரிக்கையை  முன் வைத்துள்ளார்.