தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடல் பகுதியில் சீசன் மாறி மருத்துவ குணம் கொண்ட கணவாய் மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்குகின்றன. இதனால் மீன்வரத்து அதிகமில்லாததால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் தற்போது வழக்கம்போல் பிடிபடும் மீன்கள் சிக்காமல் அதிகளவில் கணவாய் மீன்கள் சிக்குகின்றன. இந்த மீன்கள் மருத்துவக்குணம் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மருத்துவ குணம் கொண்ட கணவாய் மீன்கள் மீனவர்கள் வலையில் தற்போது சீசன் மாறி அகப்பட்டு வருகின்றன.


கணவாய் மீன்கள் சிக்குகின்றன


கணவாய் மீன்களில் 10க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதில் ஒட்டுக்கணவாய், ஈக்கன்கணவாய், சங்குக்கணவாய் ஆகிய மூன்று வகை கணவாய் மீன்கள் மட்டும் தஞ்சை கடல் பகுதியில் அதிகமாக கிடைக்கிறது. பொதுவாக மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டும் தான் இந்த கணவாய் மீன்கள் இனப் பெருக்கம் செய்கின்றன. அதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் கணவாய் மீன்கள் அகப்படும்.


அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கஜா புயலுக்கு பின்பு மீன் வரத்து மிகவும் குறைந்து விட்டது. வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு மூலம் மீன் பிடிப்பதும், இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதும்தான் மீன் வரத்து குறைந்து வருவதற்கு காரணம் என அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். 




மீன்வளம் குறைந்து வருகிறது


அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலங்களில் இரட்டை மடி வலையை வைத்து இழுத்துச் செல்வதால் மீன் குஞ்சுகள் கூட அந்த வலையில் சிக்கிக்கொள்வதால் மீன் வளம் வெகுவாக குறைந்து வருவதாகவும் மீனவர்கள் கூறுகிறார்கள். தற்போது கணவாய் மீன்கள் சீசன் மாறி பிடிபட்டு வரும் நிலையில் ஒரு மீனவர் வலையில் 15 கிலோ கணவாய் மீன்கள் சிக்கின. 


மருத்துவக்குணம் கொண்ட மீன்கள்


இதுகுறித்து மீனவர்கள் தரப்பில் கூறியதாவது: கணவாய் மீன்கள் அதிராம்பட்டினம் கடல்பகுதியில் ஒரு காலத்தில் அதிக அளவில் அகப்படும். அப்படி அகப்பட்ட இந்த கணவாய் மீன்கள் பதப்படுத்தப்பட்டு சிங்கப்பூர், மலேசியா, குவைத் உட்பட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இது மருத்துவகுணம் கொண்ட மீன் என்பதால் உள்ளூர் மார்க்கெட்டிலும் இதற்கு மவுசு அதிகம். இரும்புச்சத்து, கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் மூட்டுவலி, இடுப்புவலி, மூலநோய் மற்றும் உடல் சூடு தொடர்பான நோய்களையும் குணப்படுத்தும். எனவே பொதுமக்கள் ஆர்வமுடன் கணவாய் மீன்களை வாங்கி செல்வார்கள்.


மீன்கள் வரத்து மிகவும் குறைந்தது


தற்போது அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மீன்கள் வரத்து மிகவும் குறைந்து விட்டதால் வெளிநாட்டுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். தற்போது அதிகமாக 3 அரை கிலோ வரை வளரும் ஒட்டுக்கணவாய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350 வரை விற்பனையாகிறது. சிறிய வகை கணவாய் மீன்கள் கிலோ ரூ.250-ல் இருந்து ரூ.300 வரை விற்பனையாகிறது. இவ்வாறு மீனவர்கள் கூறினர்.