தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சியில் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேயர் சண்.ராமநாதன் தேசியக்கொடி ஏற்றினார். தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர தினவிழா நடைபெற்றது. ஆணையர் கண்ணன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் வரவேற்றார். மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செய்தார்.

Continues below advertisement

பின்னர் அவர் மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார். தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். விழாவில் மாநகராட்சி அலுவலர்கள், மண்டலக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

பட்டுக்கோட்டை பள்ளியில் சுதந்திர தினவிழா

பட்டுக்கோட்டை வட்டம் தொக்காளி காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  தலைமை ஆசிரியை ஹெலன் அன்புச்செல்வி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.  தொக்காளிக்காடு நண்பர்கள் அமைப்பு அப்பள்ளியில் பயிலும் 180 மாணவர்களுக்கும் குடை, தண்ணீர் பாட்டில், டிஃபன் பாக்ஸ், எழுது பொருட்கள், ஸ்வீட்பாக்ஸ் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

இதுகுறித்து தொக்காளிக்காடு நண்பர்கள் அமைப்பினர் கூறுகையில், தனியார் பள்ளி மோகம் மக்களை எந்த அளவுக்கு ஆட்டி படைக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் இந்தப் பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். அதற்குக் காரணம் எங்கள் கிராமத்தின் ஒற்றுமை.

1971 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது வரை மாணவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்து வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு பயின்று முடிக்கும் மாணவர்கள் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் சென்று தான் உயர்நிலைப் படிப்பை படிக்க வேண்டி இருக்கிறது. தொக்காளி காடு உள்ளடங்கிய கிராமம் என்பதால் போக்குவரத்து வசதியும் இல்லாமல் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே எங்கள் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் 200 அரசு பள்ளிகளை மாணவர்களின் எண்ணிக்கை போதாத காரணத்தால் மூடும் நிலையில் இருக்கும் போது எங்கள் ஊரில் இருக்கும் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை குறையாமல் பார்த்து வருகிறோம். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தான் இந்த பொருட்களை வழங்கி இருக்கிறோம். 

இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து பொருட்களும் வழங்க இருக்கிறோம். எனவே எங்கள் பள்ளியை தரம் உயர்த்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.