நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் அரசியலில் இறங்குவதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குறிப்பாக மாணவர்கள் பயன் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் மாநில அளவில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை சமீபத்தில் நடிகர் விஜய்யால் வழங்கப்பட்டன. அதனை அடுத்து நடிகர் விஜய் அறிவுறுத்தலின்படி, ஜூலை 15 அன்று முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் காமராஜரின் உருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்கினர். மேலும், காமராஜரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாடசாலைகள் தொடங்கப்பட உள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'தளபதி விஜய் பயிலகம்' என்ற பெயரில் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பயிலகம் ஒன்றினை திறந்துவைத்தார்.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’விஜய்யின் உத்தரவுக்கு இணங்க தளபதி விஜய் பயிலகம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இவை படிப்படியாக அதிகப்படுத்தும் பட உள்ளது. மாணவர்களுக்கு புகார் ஏதேனும் இருந்தால் தெரிவிக்க புகார் பெட்டி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிலகங்கள் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் எனவும் , முதல்கட்டமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படும். 10, +12 வகுப்பு மாணர்களுக்கு தேவைக்கு ஏற்ப பின்னர் பயிலகம் அமைய உள்ளது என்றும், தளபதி விஜய் பயிலகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவது குறித்து விஜய்யுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
இந்நிலையில் மாணவர்களுக்கு வெறுமனே மாலை நேர வகுப்பு எடுத்து பாடம் சொல்லித் தருவதுடன் எங்கள் வேலை முடிந்துவிடவில்லை என்று, வரிந்து கட்டிக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர். மயிலாடுதுறை அருகே ஐவநல்லூர் ஊராட்சி சோத்தமங்கலம் கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அண்மையில் மாலை நேர பாடசாலை தொடக்கப்பட்டது. சுமார் 20 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட வகுப்பில் தற்போது 40 -க்கும் மேற்பட்டோர் மாலை நேர கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களில் பலர் முடி திருத்தம் செய்து கொள்ளாமல் இருப்பதை உணர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், அவர்களில் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்களை, அருகில் உள்ள நகரமான மணல்மேட்டுக்கு அழைத்துச் சென்று அவர்கள் அனைவருக்கும் முடி திருத்தம் செய்து, மீண்டும் அழைத்து வந்து மாணவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று விட்டனர். இவர்களது இந்த நடவடிக்கையை விஜய் மக்கள் இயக்கத்தினர் "எப்படி எல்லாம் உதவுறாங்க" என கிராம மக்களை மட்டும் இன்றி மற்ற கட்சியினரையும் ஆச்சரியத்துடன் உற்று நோக்க வைத்துள்ளது.