தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் பெறுதல் அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் தீவிர பிரச்சாரம் என தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டி காணப்பட்டது. இதில் முக்கிய நிகழ்வான வாக்கு பதிவு தமிழகம் முழுவதும்  இன்று காலை தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



தமிழகத்தின் 38 வது மாவட்டமாக நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்பட்ட  மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இதுவாகும்.  இந்த தேர்தலில் 72 ஆயிரத்து 846 ஆண்கள்,  77 ஆயிரத்து 77 பெண்கள் மற்றும் 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 938 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 123 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மாவட்டம் முழுவதும் திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்கள் என 596 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 



மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. இன்று நடைபெறும் வாக்குப் பதிவிற்காக மாவட்டம் முழுவதும் 177 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 51 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 



இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. காலை 7 மணி முதல்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில் 6 ஆவது வார்டில் காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 8-இல் திமுக முகவர்கள் வாக்கு செலுத்த வரும் பொதுமக்களிடம் வாக்குப்பதிவு நடைபெறும் அறையின் உள்ளேயே திமுக வேட்பாளர் ரூஷிக்குமாருக்கு வாக்கு சேகரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. 


TN Urban Local Body Election 2022 Voting | ”இந்த முறைதான் தனியா வந்து வாக்களிக்கிறேன். மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்” - வாக்களித்த பின் சசிகலா பேட்டி..


பின்னர் அந்த வார்டில் போட்டியிடும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட வேட்பாளர்கள் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதை தொடர்ந்து, வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று வருகிறது.