மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்தது. 1993 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது.அதன் காரணமாக இந்திய அளவில் சிறந்த ஆலை என்று விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு  ரூபாய் 33  கோடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம்  பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில் ஒரு டன்னுக்கு  59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் நஷ்டத்தை சந்தித்து வந்த  ஆலையை மறுசீரமைப்பு செய்ய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2015ஆம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதி ஆலை புணரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்தார். 




ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆலையை புணரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு இதுநாள் வரை வழங்கவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017 ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. இதனையடுத்து ஆலையை புனரமைக்ககோரியும், ஆலையை இயக்ககோரியும் கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர். மேலும் தற்போது ஆலையில் பணிபுரியும் 129 ஊழியர்களுக்கு கடந்த 27 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. பணிஓய்வு பெற்றவர்களுக்கு சேமநலநிதியும் வழங்கவில்லை. 




இதன் காரணமாக ஆலை தொழிலாளர்கள் சர்க்கரை ஆலை வளாகத்திலேயே நேற்று இரவு கஞ்சித்தொட்டி திறந்து காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர். ஆலையின் சிஐடியு சங்க செயலாளர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மாவட்ட செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் ராமானுஜம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


போராட்டத்தில், கடந்த 27 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், ஆலையை உடனே இயக்க வேண்டும், ஆலையில் ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படாத பணப்பயன், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும், சர்க்கரை ஆலையில் பணி புரிந்து வரும் தொழிலாளர்களின் தகுதிக்கேற்ப பிற அரசு துறையைச் சேர்ந்த பணிகளில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.