விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு இதுவரை 100 கோடி ரூபாய் தமிழக அரசு பரிசு தொகை வழங்கியுள்ளதாக குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டியின் அரையிறுதி போட்டியை துவங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கபாடி போட்டி தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 27- ம் தேதி முதல்  துவங்கி நடைபெற்ற வருகிறது. நாக்அவுட் முறையில் பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்ற போட்டிகளில் மயிலாடுதுறை, திருவாரூர், கோயமுத்தூர், திருச்சி, சேலம், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. 




இதில் தமிழ்நாடு காவல்துறை அணி, வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ்அணி, சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணி, திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. தமிழ்நாடு காவல்துறை அணியும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணியும் பங்கேற்ற முதலாவது அரையிறுதி போட்டியை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணியும், பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த போட்டிகளை ஆரவாரத்துடன் கபாடி போட்டி வீரர்களை உற்சாகப்படுத்தி ஏராளமான கபாடி ரசிகர்கள் கண்டு ரசித்தனர். 




முன்னதாக போட்டியை துவங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ”இந்தியா திரும்பி பார்க்கும் அளவில் தமிழ்நாடு  வீரர்கள் விளையாட்டுதுறையில் பல சாதனைகளை படைத்து வருவதற்கு காரணம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததே. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றால் 3 கோடி ரூபாயும், வெள்ளிப்பதக்கத்திற்கு 2 கோடி ரூபாயும், வெண்கலப்பதக்கத்திற்கு 1 கோடி ரூபாயும் தமிழக அரசு வழங்குகிறது. அதேபோல வெளிநாடுகளில் தேசிய அளவில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் சாதித்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு  24 மணி நேரத்தில் ஊக்கத்தொகை வீரரின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டமும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 100 கோடி ரூபாய் பரிசுதொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது” என பெருமையுடன் கூறினார்.




அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி,  சென்னை கட்டங்குடி பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணி தோற்கடித்து முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்று 1 லட்சம் ரூபாய் ரொக்க பரிசை தட்டிச் சென்றது. சென்னை கட்டங்குடி பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணி இரண்டாம் இடம் பிடித்து  70 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினையும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசினையும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடம் பிடித்து  40 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசை பெற்றன. மேலும் காலிறுதிப் போட்டியில் வெளியேறிய நான்கு அணிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா. முருகன் எம்.எல்.ஏ வழங்கினார்.