மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிக்கு திருமணம் அவரின் பெற்றோர்கள் , ஏற்பாட்டின் படி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமகன், மணமகள் ஆகிய இருதரப்பினரும் அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்திருந்தனர். இந்நிலையில் திருமணம் நடைபெற உள்ள பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்ற தகவலை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் இதனை சீர்காழி கோட்டாட்சியர் நாராயணனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.  


இதனை அடுத்து சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன், சீர்காழி வட்டாட்சியர் சண்முகத்திடம் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் மற்றும் புதுப்பட்டினம்  காவல்நிலைய காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் காவலர்கள் அப்பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று மணப்பெண் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் வயதை உறுதி செய்யும் விதமாக சான்றிதழ்கள் சரிபார்த்த போது பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் ஆறு மாத காலம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 



இதனையடுத்து குழந்தை திருமண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து திருமணத்தைத் தடுத்து நிறுத்திய சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் மேலும் இரு தரப்பு பெற்றோர்களும் இதுகுறித்து விளக்கம் அளித்து எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருமண அழைப்பிதழ்கள் பெற பெற்ற உறவினர்கள், நண்பர்கள் என திருமண மண்டபத்திற்கு வருகை தந்து திருமணம் நடைபெறவில்லை என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


மயிலாடுதுறையில் மரத்தில் கூடுகட்டியுள்ள விஷவண்டுகளால் விவசாய வேலைகளை தவிர்க்கும் மக்கள்...!


 



கொரானா வைரஸ் தொற்று கட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றன. இந்நிலையில் இச்சூழலால் கிராமப்புறத்தில் உள்ள படிப்பறிவு இல்லாத பல பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகளுக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளை சிறுவயதிலேயே திருமணம் செய்து வருகின்றனர். மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குழந்தைத் திருமணங்கள் குறித்து புகார்கள் வந்த பிறகு ஆய்வு செய்து அதனை நிறுத்துவதற்கு முன்பு, குழந்தை திருமணங்களை கண்காணிக்க ஒரு குழுவினை அமைத்து கிராமப்புறங்களில் முழுமையாக கண்காணித்து குழந்தை திருமணத்தை நடைபெறாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.