மயிலாடுதுறை மாவட்டத்தில் வானாதிராஜபுரம், கடலங்குடி, மன்னம்பந்தல், காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பொங்கல் கரும்பான செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு ஆட்சிபொறுப்பேற்ற திமுக அரசும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு கரும்புக்கு 15 ரூபாய் என விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பினை கொள்முதல் செய்தது. 




இதனை நம்பி கடந்த ஆண்டை விட கூடுதலான நிலப்பரப்பில் இந்த ஆண்டு கரும்பு விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவதாக அறிவிக்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு கரும்புகளை கொள்முதல் செய்யாததால், தனியார் வியாபாரிகள் விவசாயிகளை அணுகி 10 ரூபாய்க்கும் குறைவாக கரும்புகளை விலை பேசுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.




தமிழக அரசை நம்பி விவசாயிகள் கூடுதலாக கரும்புகளை பயிரிட்ட நிலையில் அரசு விவசாயிகளை வஞ்சிப்பது கண்டனத்துக்குறியது என்றும், நிகழாண்டு பொங்கலுக்கு செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக குத்தாலத்தை அடுத்த வானாதிராஜபுரம் கிராமத்தில் கரும்பு விவசாயிகள் தங்கள் வயல்களில் பயிரிட்டுள்ள கரும்புகளில் கருப்பு துணியை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரும்புகளை கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்பில்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  உடனடியாக பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து அரசு அறிவிக்காவிட்டால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி விழாவின் பகல்பத்து நிகழ்ச்சியான படியேற்ற சேவை,  மற்றும் மார்கழி நாட்டிய ஆஞ்சலி நிகழ்ச்சியில் பரதநாட்டிய கலை விழா ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பஞ்ச அரங்கங்களுல் ஒன்றானதும், 108 வைணவ ஆலயங்களுல் 22 ஆலயமான பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சந்திரன் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற இந்த ஆலயத்தின் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 23 -ம் தேதி துவங்கி திருநெடுந்தாண்டகத்துடன்  நடைபெற்று வருகின்றது. பகல்பத்து விழாவின் பெருமாள் ராஜ அலங்காரத்தில் புறப்பட்டு உள்பிரகார வீதியுலா வந்தார். 


திருவந்திக்காப்பு மண்டபத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து படியேற்ற சேவை நடைபெற்றது. அப்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் படியேற்ற தமிழ்பாடல்களை கூட்டாக பாடி வழிபாடு செய்தனர். தொடர்ந்து மயிலை சப்த ஸ்வரங்கள் குழுவினரின் மார்கழி பரதநாட்டிய கலை விழா நடைபெற்றது. இதில் காளியின் அவதாரம், ஆண்டாள் பக்தி, குழலூதும் கண்ணன், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், மாணவிகள் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.