இந்திய குடியரசு தினம் வருகின்ற 26 - ஆம் தேதியான நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷாவுடன் ஆயுதப்படை காவலர்களின் குடியரசு தின அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார்.
இதனை முன்னிட்டு குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் காவல் ஆய்வாளர் விஜய் லூர்து பிரவீன் தலைமையில் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். ஆயுதப்படை காவலர்கள் புழுதி பறக்க துப்பாக்கியுடன் வீரநடை நடந்து அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டது அனைவரையும் பிரமிக்க வைத்தது.
நாட்டின் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் மெட்டல் டிடக்டர் உதவியுடன் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தினம் நாளை நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலைய பார்சல் பகுதி, உள்ளிருந்து வெளியே வரும் பகுதி மற்றும் அனைத்து பிளாட்பாரங்களிலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்படுகிறது.
மேலும், ரயில்களில் உள்ளே ஏறி கேட்பாரற்று பார்சல் ஏதாவது கிடந்தால் அது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ரயில்வே பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்தும், ஜன்னல் அருகே உட்காருபவர்கள் எவ்விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு சென்னை மற்றும் திருச்சி, திருவாரூர் ஆகிய மார்க்கங்களில் தினந்தோறும் 25 -க்கும் மேற்பட்ட ரயில் வண்டிகள் வந்து செல்லும் நிலையில், குடியரசு தினத்தை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.