இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர்கள் உயிர் நீத்தார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று அக்டோபர் 21 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்கள் நீத்தார் நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது. 




இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மாவட்ட ஆட்சியர் லலிதா, வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த காவலர்களுக்காக  மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மற்றும் காவலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை காவலர்கள் செய்தனர். இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவலர்கள் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவர்களுக்கும், 72 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா வழங்கி பாராட்டு தெரிவித்தார்.




மயிலாடுதுறை அருகே ஈமக்கிரியை மண்டபம் இல்லாததால் தற்காலிக ஷெட் அமைத்து காரியங்களை நடத்திய கிராமமக்கள்:- மயானத்துக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.


மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு கிட்டப்பா பாலம் அருகே சுடுகாடு அமைந்துள்ளது. ஆனால் இந்த சுடுகாட்டிற்கு செல்வதற்கு நிரந்தர பாதை இல்லை. யாரேனும் இறந்தால் உடலை எடுத்துச் செல்வதற்கு அவர்களது உறவினர்கள் பெரும் தொகையை செலவிட்டு ஜேசிபி எந்திரம் அல்லது  பணியாட்களை கொண்டு பாதையை சுத்தம் செய்து அதன் பின்னரே உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.




மேலும், அங்கு இறுதி காரியம் நடத்துவதற்கு, ஈமக்கிரியை மண்டபம் இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுநாள் பாதை அமைத்து தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அண்மையில் உயிரிழந்தவருக்கு இன்று ஈமக்கிரியை நடத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், இறுதி காரியத்தை அமர்ந்து நடத்துவதற்காக, அங்கு வாடகைக்கு தகர ஷீட்டில் தற்காலிக மேற்கூரை அமைத்து ஈமக்கிரியை நடத்தினர். தொடர்ந்து மாப்படுகை மயானத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இயற்கை விவசாயி ராமலிங்கம்  தலைமையில் அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதி கோரி சிறிது நேரம் கண்டன முழக்கங்களை எழுப்பி பின்னர் கலைந்து சென்றனர்.