சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும், பள்ளிகளில் தமிழ்தான் கட்டாயப் பயிற்று மொழி உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த பிப்ரவரி 21 -ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ‘தமிழைத் தேடி’ பரப்புரை பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தொடங்கினார். அதில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும், பாமக கவுரவ தலைவருமான ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தமிழ் அறிஞர்கள் அரு.கோயிலன், தமிழண்ணல் கோ.பெரியண்ணன், புலவர் சுந்தரராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




தொடக்க நிகழ்ச்சியில் ராமதாஸ் எழுதிய 'எங்கே தமிழ்' என்ற நூலை சீர்காழி சிவ சிதம்பரம் வெளியிட்டார். முதல் பிரதியை புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக்கொண்டார். இந்த பரப்புரை பயணம் மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக பயணித்து மதுரையில் வரும் பிப்ரவரி 28 -ம் தேதி நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 21-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணம்  மயிலாடுதுறையில் நடைபெற்றது. 




இதையொட்டி, மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பொங்கு தமிழ் அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனக் கல்லூரி செயலர் இரா.செல்வநாயகம், முன்னாள் தமிழ் துறை பேராசிரியர் சிவச்சந்திரன், ஏ வி சி கல்லூரியின் தமிழ் துறை முன்னாள் தலைவர் துரை.குணசேகரன், இன்னாள் துறை தலைவர் தமிழ்வேலு, மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை தலைவர் சி.சிவசங்கரன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனர் ச.பவுல்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 




இக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசுகையில்,  “தமிழை வளர்ப்பதில் சைவ ஆதீனங்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக தருமபுரம் ஆதீனம் தமிழ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் அறிஞர்கள் முதல் சாமானியர்கள் வரை தற்போது யாரும் அந்நிய மொழி கலப்பின்றி பேசுவதில்லை. இதன் காரணமாகவே "தமிழைத் தேடி" என்ற இந்த விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொண்டுள்ளேன். மெல்லத் தமிழ் இனி சாகும் என நீலகண்ட சாஸ்திரி கூறினார்.




ஆனால் தமிழ் தற்போது வேகமாக செத்துக் கொண்டிருக்கிறது. வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க தமிழ் அறிஞர்கள் வலியுறுத்த வேண்டும். அதனை அகற்ற 30 நாட்கள் அவகாசம் கொடுங்கள். அவை தானாக அகற்றப்படும். கரோனா பெருந்தொற்று காலத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை படித்துப் பார்த்தேன். எவ்வளவு அருமையான மொழி. இந்த மொழி அழிவதற்கு யாரும் விட்டு விடக்கூடாது” என்றார். இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட தலைவர் சித்தமல்லி ஆ.பழனிசாமி, பாமக நிர்வாகிகள் தங்க.அய்யாசாமி, ஐயப்பன், காமராஜ், சக்திவேல், கமல்ராஜா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.