அண்மையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்த 23 பேர் உயிரிழந்த நிலையில், அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் டாஸ்மாக் அருகே உள்ள பாரில் மது குடித்தவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த இரு சம்பவங்களும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் தாக்கம் இன்றும் மறையாத சூழலில் அதேபோன்று மற்றோரு சம்பவம் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்தேறிள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் 55 வயதான பழனிகுருநாதன். இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொள்ளம்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். 


 




இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 65 வயதான பூராசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மாலை 5 மணிவரையில் வேலை செய்துள்ளனர். சிறிது நேரத்தில் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். மேலும் அவர்கள் அருகில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில் இரண்டு கிடந்துள்ளது. அதில் ஒன்றில் பாதி மதுபானமும், ஒரு பாட்டில் திறக்காமல் அப்படியே இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் மீட்ட உறவினர்கள் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.




இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பூர் காவல்துறையினர் கொள்ளம்பட்டறையில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் அரசு டாஸ்மாக் மதுபானம் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு பேரும் இறந்துள்ளனர். இருவருக்கும் குடும்பத்தில் எவ்வித பிரச்னையும் கிடையாது. இருவருக்கும் இணைநோய்கள் எதுவும் இல்லை. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், டாஸ்மாக் மதுபானத்தை குடித்ததால்தான் இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ்குமார் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுஅருந்தி 2 பேர் இறந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக மயிலாடுதுறையில் 2 பேர் இறந்தது டாஸ்மாக் மதுபானம் குடித்ததில் இறந்தார்களா? அல்லது வேறு காரணமா என்பது உடற்கூறு ஆய்வுக்கு பிறகுதான் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




மேலும், பழனி குருநாதன், பூராசாமி ஆகிய இருவர் டாஸ்மார்க் மதுபானம் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட டாஸ்மாக் மது பாட்டில்களை தஞ்சாவூர் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்து காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





மேலும், இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம் அடைந்துள்ளதாக நாளிதழில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது? பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவு, மீண்டும் இரு உயிர்கள். உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், மக்கள் உயிரைப் பற்றிக் கவலையில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன் என் பதிவிட்டுள்ளார்.