மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர்  சின்னப்பன். இவரது மகன் நிஜித்குமார் என்பவருக்கு மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறையில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் விஜயன் என்பவர் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விஜயன் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவின் மாநில இணை அமைப்பாளராக இருந்து வருகிறார். சின்னப்பன், பூம்புகார் பகுதியைச் சேர்ந்த உறவினர் சந்திரன் என்பவர் மூலமாக பாஜக பிரமுகர் விஜயனிடம் 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமாக கடந்த ஆண்டு மே மாதம் கொடுத்ததாக கூறப்படுகிறது.




முதலில் மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்த விஜயன் பிறகு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து வேலை கிடைக்காத நிலையில் மீண்டும் பணத்தை கேட்ட போது இரண்டு காசோலைகளை விஜயன் கொடுத்துள்ளார். ஆனால் அவற்றில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சின்னப்பன் தன்னை அடியாட்கள் மூலம் விஜயன் மிரட்டுவதாகவும், தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷாவிடம் நேரில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் காவல் நிலையத்திற்கு வரும்படி கூறியிருந்தார். அதன் அடிப்படையில் காவல் நிலையம் சென்றனர். புகார் குறித்து விசாரிப்பார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்திருந்த நிலையில், பணி விஷயமாக செல்வம் வெளியே சென்றதால் புகார் தொடர்பாக விசாரிக்கப்படவில்லை. இதனிடையே பாதிக்கப்பட்ட சின்னப்பனுக்கு விஜயன் ஒரு வாட்ஸ் அப் ஆடியோ மெசேஜ் அனுப்பி இருந்தார். 




அதில் தங்கள் ஒருவரிடம் மட்டுமல்ல மேலும் 24 பேரிடம் பணம் வாங்கியுள்ளேன், நான் பணம் கொடுத்த இடத்தில் என்னை ஏமாற்றி விட்டனர். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்யுங்கள், பத்திரிகைகளில் வேண்டுமானாலும் வெளியிடுங்கள் என்று ஆடியோ மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்த புகார் குறித்து ஆய்வாளர் விசாரணை செய்ய உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த  விவகாரம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மயிலாடுதுறை அருகே மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் நேற்றுமுன்தினம் செய்யப்பட்ட நிலையில் அவரது உடலுக்கு மயிலாடுதுறை எம்எல்ஏ  ராஜ்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். மயிலாடுதுறையில் பெட்டிக்கடை நடத்தி வந்த இவர் மயிலாடுதுறையில் கடந்த 7 -ம் தேதி ஏற்பட்ட விபத்தில் தவறி விழுந்து தலையில் அடிபட்டதில், அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 




இதையடுத்து மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் ஐயப்பனின் உடலை உறுப்பு தானம் செய்ய அவரது உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால் ஐயப்பனின் உடலில் இருந்து கண், இதயம், இதய வால்வுகள், நுரையீரல், கிட்னி, கணையம் ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டு சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் ஐயப்பனின் உடல் அவரது சொந்த கிராமமான நல்லத்துக்குடிக்கு எடுத்துவரப்பட்டது. இதனை அடுத்து மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் ஐயப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.