மயிலாடுதுறை மாவட்டம் டெல்டா மாவட்டத்தில் காவிரி கடைமடை மாவட்டமாகும். இங்கு பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.  இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 2.20 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயிகள் நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நடவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறை தாலுகாவில் தாளடி நெற்பயிர்களில் இலைப்பேன் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 




மயிலாடுதுறை தாலுக்கா பொன்னூர், பாண்டூர் ஆகிய கிராமங்களில் நடவு செய்து 20 முதல் 25 நாள் ஆன நெற்பயிர்களில் இந்த இலைப்பேன் தாக்குதலானது தென்படுகிறது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இலைப்பேன் தாக்குதல் காரணமாக நெற்பயிரின் இலை சுருண்டு காய்ந்து மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்பதால், விவசாயிகள் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகள் அல்கா 505 என்ற மருந்தினை, தனியார் உரக்கடைகளில் வாங்கி மருந்து தெளித்து வருகின்றனர்.




எனவே, மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாதது, அதிக மழைப்பொழிவு அல்லது மழைப்பொழிவு இன்மை, நிலத்தடி நீர் பற்றாக்குறை விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு  சிரமத்துக்கு இடையே விவசாயத்தை காக்க போராடும் விவசாயிகளின் நலனைக் கருதி வேளாண்துறை அதிகாரிகள் நோய் பாதித்த வயல்களை நேரில் பார்வையிட்டு பாதிப்புகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சிலம்பம் சுற்றியபடி ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து சிறுவன்  சாதனை, மூன்றாவது படிக்கும் சிறுமி ஜிம்னாஸ்டிக் மற்றும் காற்றடைத்த ராட்சச பலூனில் வளையம் சுற்றி அசத்தல்!


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மேலூரில் அழகு ஜோதி அகாடமி என்ற தனியார் பள்ளியில் இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 91 -வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அஸ்வின் என்ற 12 வயது சிறுவன் சிலம்பம் சுற்றியபடியே ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்து சாதனை புரிந்தார். அவரது தங்கையான அஸ்விதா 8 வயது சிறுமி வளையம் சுற்றியும் சிலம்பம் ஆடியும், ஜிம்னாஸ்டிக் செய்தும் 500 மீட்டர் தூரத்தை ஏழு நிமிடங்களில் கடந்தனர். 




ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் குழுவினர் இதனை புதிய சாதனையாக அங்கீகாரம் செய்தனர். இதுபோல் சிறுமி அஸ்விதா காற்றடைத்த பெரிய ராட்சச பலூன் உள்ளே இரண்டு நிமிடம் மற்றும் 11 வினாடிகள் டாக்டர் அப்துல் கலாம் சிலை முன்பு வளையம் சுற்றி சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவ, பெற்றோர் இருவரும் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஜான் லாரன்ஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.