கதண்டு என்ற கொடிய விஷவண்டு அதிகஅளவில் காட்டுப்பகுதியில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டதால் பனைமரங்கள், தென்னை மரங்கள் மற்றும் பாழடைந்த கட்டங்களில் இவைகள் கூடுகட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய விஷவண்டு கூட்டமாக வந்து தாக்கும் குணம் கொண்டது. ஒருவரை 5 -க்கும் மேற்பட்ட கதண்டுகள் கடித்தால் உயிர்பிழைப்பது கடினம். தலையில் கடித்தால் விஷம் உடனடியாக மூளையை தாக்கும் கிட்னியை செயலிழக்க செய்யும். சிறு குழந்தைகளை இரண்டு வண்டுகள் கடித்தாலே உயிரிழக்க நேரிடும்.




கதண்ட வண்டுகள்:


வண்டுகள் இனத்தில் கொடிய விஷமுள்ள இந்த வண்டுகள் கூடுகட்டியிருப்பதை அறிந்து தகவல் தெரிவித்தால், அதை உடனடியாக தீயணைப்பு துறையினர் அழித்துவிடுவர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதி பனைமரங்களில் உள்ள கதண்டுகள் அழிக்கப்பட்டு வந்தாலும், கதண்டு விஷவண்டு தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அவ்வப்போது வந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறைக்கு மேல் இந்த கதண்டு வண்டு தாக்குதலுக்கு மயிலாடுதுறை மாவட்ட மக்கள் ஆளாகி உள்ளனர்.




விவசாயிகள் மீது தாக்குதல்:



இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நடுவு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 70 வயதான சாரதா, 67 வயதான சோமசுந்தரம், 60 வயதான அஞ்சம்மாள், 37 வயதான சரிதா,  18 வயதான பிரசாத், 49 வயதான சசிகுமார் ஆகிய ஆறு பேரும் திருமணஞ்சேரி அருகே கீழ அக்ரகாரம் வழியாக வயல் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த  கதண்டுப் பூச்சிகள் திடீரென்று அவர்களைத் தாக்கியுள்ளது. 




மருத்துவமனையில் அனுமதி:


இதில் ஆறு பேருக்கும் கதண்டு பூச்சிகள் கொட்டியதில் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு குத்தாலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் சாரதா, அஞ்சம்மாள் ஆகியோர்களுக்கு உடல்நிலை மோசமானதால் அவர்களை மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதேபோன்று பாண்டூர், திருமங்கலம், திருமணஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கதண்டுக்கூடுகள் அதிகமாக தென்னை மற்றும் பனை மரங்களில் கூடுகட்டியுள்ளதாகவும். இதனால் அப்பகுதியில் செல்லக்கூடிய மக்கள் அச்சத்துடனே சென்று வருவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை தலையிட்டு இப்பகுதியில் உள்ள கதண்டு கூடுகளை அழிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.




தீர்வு எப்போது?



மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் இது போன்ற விஷ வண்டுகள் ஆங்காங்கே கூடு கட்டி வருவதும், அவ்வப்போது மக்களையும், மரத்தடியில் விளையாடும் குழந்தைகளையும் கடித்து காயப்படுத்துவதும், இதனால் சிலர் உயிரிழக்கும் சம்பங்களும் நடந்தேறி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் உதவியுடன், தீயணைப்பு மீட்பு பணிகள் இல்லாத நேரங்களில் இது போன்று பழைமையான மரங்கள், கட்டிடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அவற்றில் கூடு கட்டியுள்ள விஷ வண்டுகளை அழிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமுக ஆர்வலர்கள் பலரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே ஒரு மூதாட்டி கதண்டு வண்டு கடித்து உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.