மயிலாடுதுறை அருகே கோடங்குடி ஊராட்சியில் குண்டு குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்துதர வலியுறுத்தி அரசு பேருந்தை வழிமறித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடங்குடி ஊராட்சியில் உள்ள ஆறு வார்டு பகுதிகளிலும் கிராமப்புறங்களுக்கு செல்லும் தார்சாலைகள் குண்டும் குழியுமாகவும், கப்பிகற்கள் பெயர்ந்தும் செப்பனிடப்படாமல் இருந்து வருகிறது. இதனால் நாள்தோறும் அன்றாட தேவைகளுக்கு வெளியில் செல்ல கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலை சரி இல்லாததால் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்தது அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு முறையும் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் சாலைகள் சரி செய்து தரப்படும், புதிய சாலைகள் அமைத்து தரப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் ஊராட்சி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால் இதனால் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோடங்குடி நெடுமருதூர் செல்லும் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை வழிமறித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை சரி செய்யவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.