ஓரு ஏக்கர் நிலப்பரப்பில் 250 கிராம் விதை நெல்லில் குறுவை சாகுபடி பணிகள் செய்து 18 ஆண்டுகளாக விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார் விவசாயி ஒருவர். 




மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஆலங்குடியைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி பெருமாள் (65). நம்மாழ்வாரால் பாராட்டு பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டிலிருந்து விவசாயத்தில் புரட்சி செய்துவருகிறார். 
ஒரு ஏக்கர் குறுவை நடவு செய்வதற்காக 250 கிராம் நெல்லை விதை நேர்த்தி செய்யும் இவர், விதையில் பழுது இல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார். இவற்றை விதைப்பதற்கு 3 சென்ட் நிலத்தை  கவனமாகத் தயார் செய்து.  தன் கையாலேயே கால் கிலோ விதை நெல்லை தூவுகிறார். 20 முதல் 25 நாட்கள் வரை நாற்று வளர்ந்து பச்சைமாறுகிறது. பின்னர் 5 பெண்கூலித் தொழிலாளர்களைக் கொண்டு நடவு செய்கிறார். 50 செ.மீ இடைவெளி மற்றும் 50 செ.மீ வரிசையில் நடவு நடப்படுகிறது. விவசாயதுறையினரோ ஒருசதுரமீட்டருக்கு 60 நாற்றுக்கள் வரை நடுவதற்கு பரிந்துரை செய்கின்றனர், ஆனால், ஒற்றை நாற்றில் ஒரு சதுரமீட்டருக்கு 4 நாற்று என நட்டு நடவையே முடித்துவிடுகிறார் ஆலங்குடி பெருமாள். 




தற்பொழுது நாற்றங்காலில் நெல் தூவும் பணியை அவரே மேற்கொண்டார். முன்னோடி விவசாயி பெருமாள் குறுவை விவசாயப்பணிகளை துவங்கும்போது விவசாயப்பணிகளை பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக விவசாயிகள் வருவது வழக்கம். தற்பொழுது கொரேனா நோய் தடுப்பு ஊரடங்கு என்பதால் அவர் ஒருவர் மட்டுமே விதைவிடும் பணியை முடித்துள்ளார்.





ஓர் ஏக்கர் விவசாயம் செய்வதற்கு இவருக்கு ஆகும் செலவு 15 ஆயிரம் ரூபாய்.  மற்ற விவசாயிகள் குறைந்தபட்சம் ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர். மேலும் ஒர் ஏக்கருக்கு 2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கிறது, ஆனால் ஆலங்குடி பெருமாளின் விவசாய முறையில் நட்டால் குறைந்தபட்சம் 3 டன் முதல் 4 வரை மகசூல் கிடைக்கிறது என நிரூபித்துக் காண்பித்துள்ளார்.ஆலங்குடி பெருமாள் தனது விவசாய முறையை 2009 ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது அவருக்கு அனுப்பி வைத்தார். இதனை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆலங்குடி பெருமாள் கூறுவது உண்மை என்று விவசாய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மேல் நடவடிக்கை எதுவும் இல்லை என்று கூறும் பெருமாள், தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தனது விவசாய முறையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து குறைந்த செலவில் அதிக மகசூலை பெற விவசாயிகளை ஊக்குவிக்கவேண்டும் என்று, முன்னோடி விவசாயி பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.