தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் காங்கேயன் பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருபுவனத்தில் இருந்து காங்கேயன் பேட்டை செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது இங்கு ரயில்வே கேட் கிடையாது ஆட்கள் மட்டும் நடந்து செல்லலாம் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாது. இதனால் அவசர மருத்துவ தேவைகளுக்கும், மரணம் அடைந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல ஆண்டுகளாக கிராம மக்கள் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தரும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.




இந்நிலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வால் செல்லும் சிறப்பு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். எம்பி ராமலிங்கம் மற்றும் பொது மக்கள், ரயிலை மறியல் செய்ய உள்ளதாக தகவல் வந்ததையடுத்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வாலுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வால், காங்கேயன்பேட்டையில் ரயிலை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வால், ரயிலிருந்து கீழே இறங்கி,  எம்பி ராமலிங்கம் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டு, மனுக்களை பெற்று கொண்டு, எம்பி ராமலிங்கத்தை, தனது கும்பகோணத்திற்கு அழைத்து வந்தார்.




கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, எம்பி ராமலிங்கம் பேசுகையில், திருபுவனத்திலிரந்து காங்கேயன்பேட்டை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே தண்டவாளம் செல்கின்றது. ஆள் இல்லாத  ரயில்வே கேட்டில், ஆடு, மாடுகள் அடிக்கடி ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறது. முதியவர்கள், குழந்தைகள், ரயில் வரும் ரயிலில் சிக்கி இறந்து விடுகிறார்கள்.  கர்ப்பிணி தாய்மார்கள், உடலநலக்குறைவாக உள்ளவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லும் போது, ரயில் வந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு தாமதமாகின்றது.


தற்போது பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால், ஏராளமான மாணவர்கள், ரயில் தண்டவாளத்தை கடந்து பள்ளி, கல்லுாரிக்கு சென்று வருகிறார்கள். இதனால் வீட்டிலுள்ள பெற்றோர்கள், தினந்தோறும் குழந்தைகள் வரும்வரை காத்துகிடக்கின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம், காங்கேயன்பேட்டை கிராமத்தின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தின் கீழே கீழ் பாலம் அமைத்து தர வேண்டும். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ள நிலையில், பாலம் அமைத்து தர வேண்டும் என்றார்.


திருச்சி கோட்ட மேலாளர் மணீஸ்அகர்வால் கூறுகையில், காங்கேயன்பேட்டை தண்டவாளத்தின் கீழே கீழ் பாலம் அமைப்பதற்கு ரயில்வே போர்டு தான் முடிவு செய்ய வேண்டும். உங்களது கோரிக்கையை, ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்கின்றேன் என்றார். இதனை தொடர்ந்து காங்கேயன்பேட்டை ரயில்தண்டவாளத்தில் நின்றிருந்த பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் எம்பி ராமலிங்கம் ரயில் மறியல் செய்யஉள்ளார் என தகவல் பரவியதையடுத்து, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.