மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 11 -ம் தேதி ஒரே நாளில் 24 மணிநேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. 122 ஆண்டுளில் இல்லாத கனமழைபெய்தது. இதில் மயிலாடுதுறை சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காக்களில் 32,533 ஹெக்டேர் சம்பா தாளடி பயிர்கள் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயநிலத்திற்கு 40,031 விவசாயிகளுக்கு 43.92 கோடி இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண தொகையினை சீர்காழி தாலுக்கா கடவாசல், பெரும்தோட்டம், தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். அந்த வகையில் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் அருகே உள்ள உப்புசந்தை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடகிழக்கு பருவமழையால் தரங்கம்பாடி தாலுக்காவில் சேதமடைந்த 8 ஆயிரத்து 40 ஹெக்டேர் விளைநிலங்களுக்கு உரிய 9736 விவசாயிகளுக்கு 10.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள் நிவாரண தொகை வழங்கும் பணியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, வேளாண்மை இணை இயக்குநர் சேகர், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதனிடம், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், பல்வேறு கட்சியினரும் ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், ஹெக்டேர் ஒன்றிற்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? அரசு சட்ட திட்டத்திற்கு உட்பட்டு இந்த நிவாரணம் வழங்கியுள்ளது என்றார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13.5 ஏக்கர் இடம் மயிலாடுதுறையை அடுத்துள்ள மணக்குடியில் வாங்கப்பட்டது. அதில் புதிய பேருந்துநிலையம் கட்டுவதற்கு 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 7 -ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கே அடிப்படை வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதிய பேருந்துநிலைய கட்டுமானப்பணிக்கான இடத்தை பார்வையிட்டதுடன் அதற்கான வரைபடத்தை ஆய்வு செய்தார்.
பேருந்துநிலையத்தை ஒட்டிச் செல்லும் சாலையின் மட்டம் அளவிற்கு பேருந்து நிலையம் அமைய உள்ளதைக் கண்ட அமைச்சர், சாலையைவிட ஓர் அடி உயரத்தில் பேருந்துநிலையம் கட்டப்படவேண்டும் என்றும், அதற்காக வரைபடத்தில் மாற்றம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இவ்வாறு இருந்தால்தான் மழை காலத்திலும் இயற்கை பேரிடர் காலத்திலும் பேருந்து நிலையத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறினார். ஆய்வின்போது மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் லலிதா, திமுக மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.