கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. மின்வெட்டு குறித்து மின்துறை அமைச்சர் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், "தமிழகத்தில் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை மின் தேவை அதிகமிருக்கிறது. சென்னையில் மட்டும் மின்சாரம் 3,850 மெகாவாட் தேவைப்படுகிறது. இதை சமாளிக்க தயாராக இருக்கிறோம். வடசென்னை அனல்மின் நிலையத்தில் மூன்றாவது அலகில் அடுத்த ஆண்டு பணிகள் தொடங்க உள்ளது. புதிய அலகுகள் உற்பத்தியை தொடங்கும் போது நமது மாநிலத்தின் தேவையை நம்மாலேயே பூர்த்தி செய்ய முடியும். கடந்த அதிமுக ஆட்சியில் மின் துறையில் சரியான முறையில் வேலை செய்யவில்லை. குறிப்பாக கொரோனா நெருக்கடி காலத்தில் அப்படியே விட்டு விட்டனர்.




இதை சரிசெய்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இதன் வெளிபாடு மின் தட்டுபாடாக  தெரிந்திருக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு என்று பொதுவாக பேசக்கூடாது. கடந்த ஆட்சியிலும் மின் வெட்டு, மின் தடை ஏற்பட்டிருக்கிறது. அதை புத்தகமாகவே போட்டு வைத்துள்ளேன். அதனை படித்து பார்த்துவிட்டு இந்த ஆட்சியில் எப்படி இருக்கிறது என ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.  மின்வெட்டு, மின் தடை இரண்டிற்கு வித்தியாசம் உள்ளது. மின்வெட்டு என்பது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி இல்லை, கொள்முதல் இல்லை. அதனால் ஏற்படும் இடைவெளி என்று சொல்லலாம்.  மின் தடை என்பது நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகள், பழுது பார்க்கும் பணிகளுக்காக ஏற்படுவது. இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.




இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அருண்மொழிதேவன் ஊராட்சியில் உள்ள உக்கடை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த மூன்று மாதங்களாக லோ வோல்டேஜ் காரணமாக கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். மேலும், கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்வெட்டால் இரவு தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மின்சார வாரியத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதாலும், இதனால் குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி இன்று மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில் ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இதனால், மயிலாடுதுறை - மணல்மேடு செல்லும் பிரதான சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தற்காலிகமாக பழுதடைந்துள்ள ஒரு டிரான்ஸ்பார்மரை உடனடியாக சரி செய்து தருவது என்றும், மற்றொரு டிரான்ஸ்பார்மரை 10 நாட்களுக்குள் புதிதாக பொருத்தித் தருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.