தமிழ்நாடு மாநிலம் 13 மாவட்டங்களாக தொடங்கி நிர்வாக வசதிக்காக படிப்படியாக மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தற்போது கடைசியாக 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். 




இதில் வருவாய்த்துறை முழுமையாக பிரிக்கப்பட்டாலும் மற்ற அனைத்து துறைகளும் நாகை மாவட்ட கட்டுப்பாட்டில் இருந்து படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வணிகவரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேளாண்மைத்துறை புதிய கட்டடத்தின் மாடி பகுதியில் தற்போது தற்காலிகமாக இயங்கி வருகிறது. மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்டத்திற்கான இடங்களை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்குவதாக ஒப்புதல் அளித்திருந்தார்.




அதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் உள்ள 8.5 ஹெக்டேர் இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வந்ததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.




இந்நிலையில், தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று மாதந்தோறும் ஒரு நாள் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டமும் இங்கு நடைபெற்று வருகிறது. மேலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு வரும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.




இதுகுறித்து மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து இங்கு வருவதாகவும், ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்க கூட்டம் நடைபெறும் அரங்கில் போதிய இடவசதி இல்லாததால் அரங்கின் வெளியில் வெட்ட வெளியில் உச்சி வெயிலின் தாக்கத்தில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றும், மேலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டை தெரிவித்தனர். குறைதீர் கூட்டம் நடைபெறும் வாரத்தில் ஒரு நாளாவது, தற்காலிக துணி பந்தல் அமைத்து பொதுமக்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க வழிவகை செய்யலாம் எனவும், குடிநீர் வசதியும், குறைதீர் கூட்டம் பின்புறம் கட்டப்பட்டு பூட்டி வைத்துள்ள கழிவரையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண