இந்த ஆண்டு மேட்டூர் அணையில் முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக ஜூன் 12-க்கு முன்னதாக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பயனாக டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக இந்த ஆண்டு குருவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு சார்பில் 117 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டத்தில் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 




இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு 40 கிலோ வரை கொள்முதல் செய்யப்படும் நிலையில் மூட்டைக்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குக்கு கொண்டு செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வில்லியநல்லூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்ள சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வில்லியநல்லூரில் அமைந்துள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 




அப்போது அவர் எடை, கணக்கில் கொள்ளப்படும்  ஈரப்பதம், குறித்தும், எடை சரியான அளவு போடுகிறார்களா என சோதனை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பணியாளர்களிடம் ஒரு கிலோ கூடுதலாக கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளதாகவும், சரியாக எடை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொள்முதல் செய்யப்பட்ட  மூட்டைகளை விரைவாக கிடங்குக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். மேலும் மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்யும் போது அப்பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதனால் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் குறையும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.




பூம்புகார் அரசு கல்லூரியில் மாலைநேர கல்லூரி பேராசிரியர்களுக்கு மூன்றாண்டுகளாக சம்பளம் வழங்காததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனு அளித்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமான அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இங்கு முழு நேர கல்லூரி மற்றும் மாலைநேர கல்லூரி என்று இரண்டு விதமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 40 பேராசிரியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மணி நேரம் பாடம் எடுப்பதற்கு 75 ரூபாய் சம்பளம் வீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா காலத்தில் இருந்து இவர்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. இடையில் மூன்று மாத காலம் மட்டும் வெறும் 1300 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், தற்போது அந்த சம்பளமும் நிறுத்தப்பட்டு சம்பளம் இன்றி பணியாற்றி வருவதாக பேராசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.




மேலும், மாலை நேர கல்லூரியில் சுயநிதி பிரிவில் போதிய பணம் இல்லை என்றும் அதன் காரணமாக சம்பளம் வழங்க முடியவில்லை என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். கல்லூரி சென்று வருவதற்கு போக்குவரத்து செலவு கூட செய்ய முடியாமல் தாங்கள் கஷ்டப்படுவதாகவும், சுயநிதி பிரிவில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கல்லூரியில் பணம் இருப்பதாகவும், ஆனால் தங்களுக்கு சம்பளம் வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ள பேராசிரியர்கள், தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் பாதிக்கப்பட்ட பேரசிரியர்கள் மனு அளித்தனர்.