மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கிழாய் ஊராட்சி நாராயணமங்கலம் கிராமத்தில் உயர் மின்னழுத்தம் காரணமாக சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் மீட்டர் பாக்ஸ் மற்றும் ஒரு சில வீடுகளில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் பம்பு செட்டு உடன் கொட்டகை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
நாராயணமங்களம் மெயின் ரோட்டில் நேற்று மரம் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மரத்தை வெட்டி மின்சாரத் துறையினர் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மீண்டும் அப்பகுதிக்கு இரவு 7 மணிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது திடீரென உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு பல்வேறு வீடுகளில் வீட்டில் உள்ள மீட்டர் பாக்ஸ், ஏசி, டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு மின் சாதன பொருட்களில் அதிகளவு மின்சாரம் பாய்ந்து சத்தத்துடன் வெடித்துள்ளது. அதேபோன்று செந்தில் என்பவரது பம்பு செட்டுடன் கூடிய போர் கொட்டகை முற்றிலுமாக தீ விபத்து ஏற்பட்டு சேதம் அடைந்தது.
ஜெயமுருகன் என்பவரது வீட்டில் மீட்டர் பாக்ஸ் சத்தத்துடன் வெடித்து எரிந்து சேதம் அடைந்தது. டிவி, ஏசி உள்ளிட்ட பொருட்கள் வெடித்த சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் இதேபோல் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் வீட்டில் உள்ள மீட்டர் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், மின்சாரத் துறையினரின் அலட்சியத்தால் இந்த மின் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்து ஏற்பட்டு பல மணி நேரம் ஆகியும் தற்போது வரை மின்சாரத் துறையின் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றும் குற்றம்சாட்டிய பொதுமக்கள், இதனை உடனடியாக சரி செய்து மின் இணைப்பு வழங்கி, பாதிப்படைந்த குடியிருப்பு வாசிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாதந்தோறும் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது என்று மின்சார விநியோகத்தை நிறுத்தி, சரியான முறையில் மின்சார ஊழியர்கள் மின்சாரம் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதில்லை என்றும் இதனால்தான் இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது என குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்