ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் மக்கள் பிரதிநிதியின் அதிகாரத்தை பிடுங்கக்கூடிய செயல்பாடு சரியானது இல்லை என்பதை அனைத்து மாவட்ட தலைவர்களும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க காங்கிரஸ் மாநில தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜகுமார் கூறுகையில், “பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்திக் கொண்டுள்ள நிலையில் பிரதமர் மக்களுக்கு எதிரான, அரசியல் அமைப்புக்கு எதிரான செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.




எதிர்க்கட்சியாக மக்களுக்காக பேசக்கூடிய மக்களவை உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தவறுமேல் தவறு செய்து கொண்டிருக்கிறது. இந்திய அரசியலில் பெரும்பங்கு வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வாரிசாக உள்ள ராகுல்காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் இந்தியா முழுவதும் 3000 கி.மீ யாத்திரை மேற்கொண்டு,  நடை பயணம் சென்று செல்லாத பகுதிக்கு மீண்டும் நடைப்பயணம் செய்யப் போவதாக ராகுல் காந்தி அறிவித்த நிலையில், ராகுல் காந்திக்கு கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டதோடு, எம்பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதியின் அதிகாரத்தை பிடுங்கக்கூடிய செயல்பாடு சரியான துதானா? என்பதை மக்களிடம் சொல்ல வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. அரசியலமைப்பில் எம்பி, எம்எல்ஏக்கள் தேர்வு செய்யும்போது அவர்கள் செயல்பாடுகளில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கான சட்ட சம்பிரதாயங்கள் உள்ளது.




கீழமை நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ சட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துக் கொண்டு ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தி பதவி பறிபோய் விட்டதாக காங்கிரஸ் கட்சி போராடவில்லை, கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் நாட்டின் அவல நிலையை மக்களிடம் சொல்வதற்காக தான் காங்கிரஸ் கட்சி இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. ராகுல் அதானி ஊழலை பட்டியலிட்டு சொல்லியதோடு, நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விகள் பத்திரிகைகளில் வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரம் கோடி அதானிக்கு சொந்தமான கம்பெனிக்கு எப்படி வந்தது என்று கேட்டார். இதை கேட்பதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. இந்த கேள்விக்கான பதில் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. நமது நீதிமன்றங்கள் நேர்மையான தீர்ப்பை கொடுக்கின்றன என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறோம்.




ஆனால், நீதிபதியாக தீர்ப்பு வழங்குபவர்கள் பதவி ஓய்வு பெற்ற  மறுநாள் ஒரு கட்சியில் சேர்ந்து கவர்னராக பொறுப்பேற்கிறார்கள். அதனால் அந்த தீர்ப்பு அரசியல் சாராமல் இருக்கிறதா என்று கேள்விக்குறியாக உள்ளது. வானொலி என்ற ஒன்று இருக்கிறது என்பதை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் மங்கிபாத் என்ற நிகழ்ச்சியில் மட்டும் பிரதமர் பேசுகிறார். அதிலும் அவர் பேசுவதை மட்டும் தான் கேட்க வாய்ப்பாக இருக்கிறது. அதில் சொல்வது எல்லாம் உண்மையா? செயல்படுத்துகின்றாரா என்று தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் இரண்டு, மூன்று அமைச்சர்களை தவிர எந்த அமைச்சர்களும் பேசுவதில்லை. மக்களுக்கும் யார் மத்திய அமைச்சர் என்றே தெரியாத நிலை உள்ளது. கடைசி ஓராண்டில் ஆவது தேர்தல் வாக்குறுதிகளில் எதையாவது பிரதமர் செய்வாரா என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பண்ணை சொக்கலிங்கம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.