மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் தனியார் வியாபாரிகள் நெல்லை வாங்க ஆர்வம் காட்டாததால் அரசு கொள்முதல் நிலையங்களில் தான் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகி உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்திற்கு 123 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் குறுவை பருவத்திற்கு முதல்கட்டமாக நிரந்தர கட்டடங்கள் உள்ள கொள்முதல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டது.
அதனையடுத்து அறுவடைக்கு ஏற்ப விவசாயிகள் கோரிக்கையை ஏற்று படிப்படியாக பல இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. கடந்த சம்பா பருவத்தில் இயங்கி பல கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத பகுதிகளில் நெல்மூட்டைகளை கொண்டுவந்து விவசாயிகள் அடுக்கிவைத்துகொண்டு போராட்டங்கள் நடத்திய பின்பு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து மாலை நேரங்களில் மழைபெய்து வருவதால் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது வருகிறது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சம்பா பருவத்துவதற்கான நெல் கொள்முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பு ஏதுமின்றி கொள்முதல் திடீரென நிறுத்தப்பட்டது.
நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை கிடங்குக்கு கொண்டு செல்லாததால் சுமார் 4 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியது. இதனால் தொடர்ந்து விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யமுடியாத தால், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குக்கு கொண்டு சென்று விவசாயிகளிடம் மீண்டும் நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால் கடந்த 15 தினங்களாக கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கொண்டு செல்ல லாரிகள் வராததால் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் கோமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கின்றன. இந்த சூழலில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு எடுத்து வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. இதனால், கடன் வாங்கி நெல் சாகுபடியில் ஈடுபட்டு அறுவடை செய்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்து காத்திருக்கும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தாங்களும் இந்த தீபாவளி இதில் சூழ்ந்ததாக அமைந்து விட்டதாக வேதனை தெரிவித்தனர்.