மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் வசிக்கும் 9ஆம் வகுப்பு பயிலும்  13 வயது மாணவி கடந்த 7ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமா வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சென்றவர் அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் தேடிய சிறுமியின் உறவினர்கள் அன்றிரவே குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 




தொடர்ந்து அப்பகுதியில் தேடிய உறவினர்கள், சிறுமியின் மாமா வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி அணிந்திருந்த லெக்கின்ஸ் பேண்ட் கிழிந்து ரத்தக்கரை இருந்தது. மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.  இதை அடுத்து, சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.




தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார், வில்லியநல்லூர் கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் உடலை வாய்க்காலில் இருந்து உறவினர்கள் வீட்டிற்கு தூக்கி வந்துவிட்டதால் வாய்க்காலில் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரிலேயே போலீசார் தொடர் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதியினர் சிலரை போலீசார் கண்காணிப்பு வளைத்தில் கொண்டுவந்து அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.




இதனிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி சிறுமியின் சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்த தகவல் அறிந்த அதே தெருவைச் சேர்ந்த பிரபாகர் என்ற 25 வயதான இளைஞர் அங்கிருந்து நழுவி பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்றபோது போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.




விசாரணையில் அச்சிறுமியின் உறவினரான பிரபாகர் கடந்த 3 மாதங்களாக அச்சிறுமியை காதலித்து வந்ததும், அச்சிறுமியுடன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளதும் தெரியவந்தது. சம்பவத்தன்று சிறுமியை தனியாக வரச்சொன்ன பிரபாகர் சிறுமியுடன் உடலுறவு கொண்டுள்ளார். பின்னர், அப்பகுதி இளைஞர்களுடன் சிறுமி சகஜமாக பேசுவதை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது வேட்டியால் சிறுமியின் கழுத்தை நெறித்து சிறுமியை வாய்க்காலில் தூக்கிப்போட்டுள்ளார். இதில், சிறுமி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறிய பிரபாகர், உறவினர்களுடன் சேர்ந்து தானும் சிறுமியை தேடுவது போல் நடித்துள்ளார். பிரபாகரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இதன்மூலமாக கடந்த ஒரு வாரமாக நீடித்துவந்த சிறுமியின் மரணத்தில் நிலவிய மர்மத்துக்கு விடை கிடைத்துள்ளது.