பொதுவாக ஏழ்மை என்பது பலவிதத்தில் சாதிக்கத் துடிக்கும் பல இளைஞர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வரும் ஒன்று. அதுவும் குறிப்பாக விளையாட்டுத்துறையில் ஏழ்மை என்பது மிகப்பெரிய தடைக் கல்லாகும். இந்த ஏழ்மையை உடைத்தெறிந்து ஒரு சிலரால் மட்டுமே சாதிக்க முடிகிறது. அதுபோன்று ஏழ்மையில் சாதிக்க துடிக்கும் ஓர் மாணவியை பற்றிதான் நாம் காண இருக்கிறோம்.




மயிலாடுதுறை மாவட்டம் சேந்தன்குடி பகுதியை சேர்ந்தவர் ஏழை விவசாய ரவிச்சந்திரனின் மகள் 19 வயதான  சிந்துஜா. தற்போது மயிலாடுதுறை அருகே தனியார் கல்லூரி ஒன்றில் வணிகவியல் இறுதியாண்டு படித்து வருகிறார். ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளியில் படிக்கும்போது பள்ளி சார்பில் தற்காப்பு கலை பயிற்சி மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அப்போது அங்கு வந்த குத்துச்சண்டை பயிற்சியாளர் மாணவி சிந்துஜாவுக்கு குத்துச் சண்டைப் பயிற்சியை ஒரு வாரகாலம் அளித்துள்ளார். 




அன்று முதல் குத்துச்சண்டை மீது ஏற்பட்ட ஆசை மற்றும் ஆர்வத்தின் காரணமாக உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மேரிகோம் போல தானும் உலகளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு தங்க பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என நினைத்துள்ளார். 




ஆனால் பள்ளியில் பயிலும் போது ஒருவாரம் மட்டுமே பயிற்சி பெற்ற இவர் தொடர்ந்து முறையாக குத்துச்சண்டை பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் வசதியும் தன்னிடம் இல்லை என மனம் தளராமல், தன்னிடம் இருந்த தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தையே மூலதனமாக கொண்டு நவீன ஏகலைவன் ஆக உருவெடுத்து, தனக்குத்தானே பயிற்சி அளித்துக் கொண்டார். இவரின் தொடர் முயற்சி மற்றும் பயிற்சியின் விளைவாக மண்டல அளவில் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை குவித்து வருகிறார். 




இந்நிலையில் தன் திறமை இத்துடன் மட்டும் நின்று விடாமல் தன்னைப் போன்று குத்துச்சண்டையின் மீது ஆர்வம் உள்ள மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கும் தனக்குத் தெரிந்த குத்துச்சண்டையின் நுணுக்கங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்து அவர்களையும் பல்வேறு சாதனைகள் செய்ய வழி வகுத்து வருகிறார். மேலும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கங்களை பெற்று தர வேண்டும் என என்றும் அரசு உதவி செய்தாள் தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற ஏழ்மையால் திறனை வைத்து சாதிக்க முடியாத இளைஞர்களுக்கு அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.