திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதி மக்களின் மனிதநேய மருத்துவராக விளங்கியவரும், ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி செய்துவந்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அசோக் குமார், மருத்துவம் வணிகமாக மாறிவரும் இந்த காலத்தில் தனது அர்ப்பணிப்பு மிகுந்த சேவை மனப்பான்மையால் குறைந்த செலவில் நிறைவான மருத்துவத்தை வழங்கி வந்தவர். மன்னார்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நரிக்குறவர் இன மக்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் இலவசமாக வழங்குவதை தனது இறுதி மூச்சு வரையிலும் நிறைவேற்றி வந்தார். இலவச மருத்துவ முகாம் இலவச கண் சிகிச்சை முகாம் மட்டுமின்றி கண் தானம் வழங்குபவர்களை ஊக்கப்படுத்துவது, அவ்வாறு வழங்குபவர்களின் கண்களை கண் பார்வை இழந்த மற்றவர்களுக்கு பொருத்துவதற்கு மருத்துவர் அசோக்குமார் எடுத்துக் கொண்ட சிறப்பு முயற்சிகள் அனைவரையும் நெகிழ செய்தது.
ஜாதி மதங்களை கடந்து அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மன்னார்குடி நகர வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மனித நேய மருத்துவர் அசோக்குமார். எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இதுநாள் வரை ஐம்பது ரூபாய் மட்டுமே சிகிச்சை கட்டணமாக பெற்று எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தவர். இவரிடம் சிகிச்சை பெற்று ஏராளமான பொதுமக்கள் இன்று நலமுடன் உள்ள நிலையில் சிகிச்சை அளித்து வந்த அசோக்குமார் உயிரிழந்த சம்பவம் மன்னார்குடி மக்களை மிகுந்த துயரத்திற்கு ஆளாகி உள்ளது. அவருடைய இறுதி நிகழ்வானது இன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள நிலையில் அவரது வீட்டில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அவருடைய உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மருத்துவர் அசோக் குமார் உயிரிழந்தது தொடர்பாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசு சுகாதார நிலையங்களில் மருத்துவம் தேடி காத்திருந்த காலங்களில் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் இடமுண்டு என 35 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையாற்றியவர்.... சாதாரண அறுவை சிகிச்சைக்கு கூட பல லட்ச ரூபாய் வாங்கும் காலத்தில் பொருளாதாரத்தை பொருட்டாக கருதாமல் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றியவர்... சுத்தம் சுகாதாரம் குறித்து பல்வேறு நாடகங்களை எழுதி இயக்கி நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மனிதநேய மருத்துவர் டாக்டர் அசோக்குமார் அவர்கள் மறைந்தாலும் அவரின் சேவையால் பலர் இன்றும் நம் கண் முன்னே உயிர்ப்போடு இருக்கின்றனர். ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.