நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு,   கீழ்வேளூர், திருமருகல், நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

 



 

 

அப்போது நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த மற்றும் முளைத்த நெற்பயிர்களை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் விவசாயிகள் காண்பித்து கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர். விரைந்து கணக்கெடுப்பு பணிகள் நடத்தி நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் ஆட்சியரிடம்  கோரிக்கை விடுத்தனர்.

 



 

நெற்பயிர்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் இது குறித்து அரசுக்கு தெரிவிப்பதாகவும், இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிடம் ஆறுதல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழக நெல் கொள்முதலில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் குற்றம் சாட்டினார். அப்போது தவறான புள்ளி விவரம் அளித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரிடம் விவசாயிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மேலும் நெல் கொள்முதல் செய்வதிலும் இடமாற்றம் செய்வதிலும் முறைகேடு நடப்பதாகவும் அதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.