தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாக மதுரை ஆதீனம் உள்ளது. மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் மீனாட்சியம்மன் கோயில் அருகே இந்த ஆதீனத்தை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். இத்தகைய சிறப்பு புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.




அதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்தில் தருமபுரம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்நின்று கடந்த 14 ஆம் தேதி குரு மூர்த்தம் செய்து வைத்தார். 




அதற்கு முன்னதாக மதுரை ஆதீனத்தில் 293 ஆவது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகத்தினை தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்நின்று நடத்திவைத்து தீட்ஷையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் 293 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை புரிந்து எழுந்தருளினார். 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து மடத்தின் ஊழியர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிய ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பின்னர் தருமபுரம் ஆதீன மடாதிபதிகள் 27ஆவது குருமகா சன்னிதானம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை  நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். அவருக்கு தருமபுரம் 27ஆவது மடாதிபதி தாய்வீட்டு சீதனமாக கோபம், காமம், லோகம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு தீய குணங்களை வென்றதற்கு இணங்க தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை வழங்கினார்.




அதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் செவிகளில் தருமபுரம் தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகளின் திருக்கரங்களால் ஆறு கட்டி சுந்தர வளையத்தை அணிந்து கொண்டு 27ஆவது மடாதிபதியிடம் ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவில் திருப்பணி பணிகளுக்கான பூஜையில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.