கும்பகோணத்தில் அமைந்துள்ள சக்கரபாணி கோயில் வைணவக்கோயில் ஆகும். காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை.




ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார்.  இந்தியத்துணைக்கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார்.வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.


ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர சேத்திரம் என இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில் நிர்மாணித்து பாஸ்கர சேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான்.




இக்கோயிலில் மூலவராக சக்கரபாணி எட்டு கைகளுடனும், தாயாராக விஜயவல்லி- சுதர்சனவல்லி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றார்.இத்தகைய சிறப்பு பெற்ற கோயில் மகாமகம் தொடர்புடைய கும்பகோணத்தில், புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான சக்கரபாணிசுவாமி கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மாசிமக பிரமோற்சவத்தையொட்டி பத்து நாள் உற்சவமும், தேரோட்டமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.




அதன் படி வரும் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 7 ந்தேதி கொடியேற்றம், அதனை தொடர்ந்து பிப்ரவரி .16 ந் தேதி திருத்தேரோட்டம்  விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சக்கரபாணிசுவாமி கோயிலில் பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.  மாசி மக பெருவிழாவை முன்னிட்டு ராஜகோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் சுவாமி கோயிலிலும் கொடியேற்றமும், திருத்தேரோட்டம் நடைபெறுகின்றது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால், பக்தர்கள் இன்றி, கோயில் பட்டாட்ச்சாரியார்கள், பணியாளர்கள் மட்டுமே பந்தகால் முகூர்த்த விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மல்லிகா, கோயில் செளந்தரராஜன் பட்டாச்சாரியார் மற்றும் அந்தந்த கோயில் நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.