மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரை சேர்ந்த நோபோ மஜி, சௌடோ மஜி என்கிற இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோயில் பகுதியில் உள்ள மொத்த விற்பனை கோழிக்கடையில் கடந்த இரண்டு மாத காலமாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நோபோ மஜிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் சௌடோமஜிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து வாகனத்தின் மூலமாக கோழிகளை ஏற்றிக்கொண்டு காரைக்காலுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது திருவாரூர் அருகே மேப்பலம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்த பொழுது எதிரே வந்த வாகனத்தின் முகப்பு விளக்குகள் அதிக அளவில் வெளிச்சம் எழுப்பியதால் நிலை தடுமாறி கோழி ஏற்றி வந்த வாகனம் ஒட்டக்குடி வாய்க்காலில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் வாகனத்தின் மேலே அமர்ந்து வந்த நோபோ மஜி மற்றும் சௌடோமஜி என்கிற இரண்டு புலம்பெயர் தொழிலாளர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
மேலும், வாகனத்தை ஓட்டி வந்த கலையரசன் மற்றும் மேற்பார்வையாளர் மணிகண்டன் ஆகியோர் வாகனத்தில் உள்ளே அமர்ந்து வந்ததால் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தங்களது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக வேலை பார்க்க வந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு வந்த இரண்டே மாதங்களில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை எழுப்பி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்