திருவாரூர் மாவட்டத்தில் 99 சதவிகித தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், எஞ்சியுள்ள 34 கிலோ மீட்டர் தூர்வாரும் பணி மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

 

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். குறிப்பாக 80 சதவீதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும் 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த ஆண்டு குருவை சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்காக முன்கூட்டியே கோடை உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகள் குறித்து நாளைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. நிகழாண்டில் தூர்வாரும் பணிக்காக திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ. 12.80 கோடி ஒதுக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஆறுகள் ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.

 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்கூட்டியே தண்ணீர் திறந்த நிலையில் தூர் வாரும் பணிகளும் விரைவுபடுத்தி முடிக்கப்பட்டது. நிகழாண்டிலும் இதே போல பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டாலும் பராமரிப்பு தலைப்பின் கீழ் 12.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த தொகை போதாது எனவும் தூர்வாரும் பணிகளுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

 

குறிப்பாக மேட்டூர் அணையில் திறக்கப்படுகின்ற தண்ணீர் தங்களுடைய விலை நிலங்களுக்கு வந்தடையும் வகையில் அனைத்து கிளை வாய்க்கால்களும் தூர்வாரப்பட வேண்டும் எனவும், ஏ பி பிரிவு வாய்க்கால்கள் மட்டும் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் தூர்வாரப்படுகின்றன. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்ற சி, டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. அதுபோல் வடிகால் வாய்க்கால்களும் தூர்வாரப்படுவதில்லை. இதன் காரணமாக மழைக்காலங்களில் சிறு மழை பெய்தாலும் வடிகால்கள் வழியாக தண்ணீர் வடியாமல் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் நெற்பயிர்களை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க வேண்டுமெனில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கிளை வாய்க்கால்களையும் வடிகால்களையும் முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.