தஞ்சாவூர்: உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் சனிபகவான் அருள்பாலிக்கும் தலம் எங்கு இருக்கிறது என்று தெரியுங்களா?  இத்தலத்தில் சனிபகவானை சனிக்கிழமைகளில் மட்டுமின்றி அனைத்து கிழமைகளிலும் வன்னி இலைகளால் அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்று தெரியுங்களா? கல்வி, கேள்விகளிலும் சிறந்த விளங்கலாம்.

Continues below advertisement

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அக்னீஸ்வர சுவாமி கோயிலுக்கு வாங்க. திருமணத்தடை நீங்கும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். செல்வச்செழிப்புடன் திகழலாம் என்கின்றனர் பக்தர்கள். இத்தலம் அக்னிபகவான் வழிபட்ட தலம்.

இக்கோயில் சுவாமிக்கு அக்கினீசுவரர், தீயாடியப்பர் என்று பெயர். அம்மன் சௌந்தரநாயகி, அழகம்மை என்று அழைக்கப்படுகிறார். தல விருட்சமாக வன்னி, வில்வம், ஊமத்தை, கொன்றை ஆகியவை உள்ளது. தீர்த்தம் சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி,அக்னி தீர்த்தம் -கிணறு வடிவில் உள்ளது. திருமால், பிரமன், சூரியன், பகீரதன், அக்னி பகவான், இந்திரன் ஆகியோர் வழிபாடு நடத்தினர் என்பது புராண வரலாறு.

Continues below advertisement

இத்தலம் திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 9வது தலம் ஆகும். சுவாமி சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். மற்றொரு விசேஷம் நவக்கிரக சன்னதியில் அனைத்து கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. நவக்கிரகங்களும் "ப' வடிவில் அமைந்துள்ளன.

அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் எரிந்து நாசமாகி விடுவதால் அந்த விடுபட வழிகேட்டு முறையிட இறைவன் தோன்றி இத்தலத்தில் (திருக்காட்டுப்பள்ளி) ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் பழி தீரும். அதேபோல் இக்குளத்தில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். அதேபோல் அக்னி பகவான் வழிபட்டார். அக்னி பகவான் வழிபட்டதால் இக்கோயிலுக்கு அக்னீஸ்வரம் என்று பெயர் வந்தது.

இதேபோல் சனி பகவான் பாரபட்சம் பார்க்காமல் தவறுகளுக்கு தண்டனையும், நன்மை செய்தவர்களுக்கு சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். ஆனால் சனிபகவான் செய்யும் நன்மைகளை கண்டு சந்தோஷப்படாமல், தீய பலன்களைப் பற்றி மட்டுமே நினைத்து பயந்தனர். இதனால் வருந்திய சனி, வசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அக்னி உருவில் தரிசனம் தந்து, சனியை பொங்கு சனியாக மாற்றினார். இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோருக்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என அருள்புரிந்தார்.

சிவன் அருளின்படி சனிபகவான் இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வை தருகிறார். இத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இந்த ஊர் மேலைத் திருக்காட்டுப்பள்ளி என்றழைக்கப்படுகிறது. இங்குத்தான் குடமுருட்டியாறு பிரிகிறது. திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயரில் இரு தலங்கள் உள்ளன. ஒன்று இது. மற்றொன்று திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது. அது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படுகிறது.

ஐந்து நிலைகளுடன் கூடிப் பொலிவுடன் ராஜகோபுரம் உள்ளது. பள்ளி என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருந்ததற்கான சான்று என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-ஆவது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளது.

இத்தலத்தில் சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுக்களில் அம்மன் பெயர் அழகமர்மங்கை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தெட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். இத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர்.

இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராட்சம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து யோக மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரை வழிபடுபவர்களுக்கு திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விநாயகர் சன்னதியும் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் உள்ளார். பக்கத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகள் உள்ளன.

இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை சனிக்கிழமைகளில் மட்டுமின்றி அனைத்து கிழமைகளிலும் வன்னி இலைகளால் அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். நமது பாவங்கள் அனைத்தையும் இத்தல இறைவன் அழித்து விடுவதால், பாவங்களுக்கு தண்டனை அளிக்கும் வேலை, இத்தலத்து நவக்கிரகங்களுக்கு கிடையாது.

இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் விஷ்ணு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.