தஞ்சாவூர்: தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு மெஹந்தி திருவிழா நடைபெற்றது. இதில் கர்ப்பிணி பெண்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.


தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவின்படி 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலங்கள், கோலப்போட்டி போன்றவை நடத்தப்பட்டது. இதில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


என் ஓட்டு என் உரிமை


இதேபோல் தஞ்சாவூர் கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உத்தரபிரதேச மாநில கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு திருவிழா, கல்லுக்குளம் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்பு போன்றவை நடந்தது. மேலும் தஞ்சாவூர் சீனிவாசபுர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடையில் என் ஒட்டு என் உரிமை" என ஸ்டிக்கர் ஒட்டி 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.




தேர்தல் விழிப்புணர்வு மெஹந்தி திருவிழா


இதேபோல்  மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் கலந்துகொண்ட தேர்தல் கிரிக்கெட் திருவிழா போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள தேர்தலில் அனைவரும் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்திடவும், தங்கள் வாக்காளர் கடமையை நிறைவேற்றிடவும், அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவை அளித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் மகர்நோன்பு சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு மெஹந்தி திருவிழா நடைபெற்றது.


இதில் மேட்டுப் பிள்ளையார் கோவில் தெரு, ஆட்டு மந்தை வைக்கோல் காரத்தெரு, படைவெட்டி அம்மன் கோவில் தெரு, வாடிவாசல் கடைத் தெரு, வி.பி. கோவில் சன்னதி தெரு, வாணகாரத் தெரு, அண்ணா காலனி, தொல்காப்பியர் நகர், செண்பக வள்ளி நகர் மற்றும் கிருஷ்ணன்கோவில் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 54 கர்ப்பிணிகள் உற்சாகத்துடன் மெஹந்தி திருவிழா பங்கேற்றனர்.


இதில் கர்ப்பிணிகளுக்கு மகர்நோன்பு சாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கலைச்செல்வி நிவேதா, வனரோஜா நகர்ப்புற செவிலியர்கள் அருள்மொழி மற்றும் சாரதா ஆகியோர் அழகழகான மற்றும் பல்வேறு விதமான வடிவமைப்புடன் கூடிய மெஹந்திகளை வரைந்தனர். மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என கர்ப்பிணி பெண்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகர்நோம்பு சாவடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் லட்சுமண் குமார் மற்றும் ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


வாக்காளர் விழிப்புணர்வு பேரணி


இதேபோல் தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட்  மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.


வாக்காளர் உறுதிமொழி


தஞ்சாவூர் துணை ஆட்சியர் பயிற்சி விஷ்ணுப்பிரியா தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் லதா, வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவிகள் நளினி, சரண்யா ஆகியோருடன் 60க்கும் அதிகமான திருநங்கைகள் கலந்து கொண்டு வாக்களிக்கும் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள் வழங்கல்


தொடர்ந்து பேரணியாக சென்று வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் வீடுகளிலும், பஸ்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.