தஞ்சாவூர்: ஒரு மணி நேரமாக டென்ஷனுடன் அலைந்து ஒரு கட்டத்தில் அப்பாடா என்று வேட்பு மனு தாக்கல் செய்தார் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவனேசன். இதனால் அவர் கடும் கோபமும் அடைந்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகளும் டென்ஷன் அடைந்தனர்.


தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தேமுதிக வேட்பாளராக சிவனேசன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் சிவனேசன் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மதியம் ஒரு மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், அமைப்புச் செயலாளர் சிவ ராஜமாணிக்கம் ஆகியோர் வந்திருந்தனர். 


வேட்பு மனு விண்ணப்பம் எங்கே


உடன் இருந்தவர்கள் வேட்பு மனு விண்ணப்பம் எங்கே என்று கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவநேசன் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் செந்தில்குமாரை தேடி ஓடினார்.  மாவட்ட ஆட்சியர் கேட் முதல் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் வரை 4 முறை ஓடிக்கொண்டே இருந்தார் வேட்பாளர் சிவனேசன். இதனால் அவருக்கு செம டென்ஷன் ஏற்பட்டது. பின்பு டெபாசிட் தொகை உள்ளதா என்று கூட இருந்தவர்கள் கேட்க அதற்கும் அவர் பதட்டம் அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொருவராக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தார். 


மேலும் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே மனு தாக்கல் செய்ய அனுமதிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் என நான்கு பேர் இருக்கும் நிலையில், முன்மொழிபவர் வரவில்லை என தெரிய வந்தது.


ஒரு மணி நேரம் ஓடி ஓடி அலைந்தார்


பின்பு மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே ஓடிய சிவனேசன் முன்மொழிபவர் ஆன தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதி அதிமுக செயலாளர் மனோகரை அழைத்து வந்தார். ஒரு மணி நேரம் ஓடி ஓடி அலைந்து கடைசியாக 2 மணிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


வேட்பு மனு தாக்கல் செய்வதற்கே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதே தேர்தல் வரை என்னென்ன நடக்கப் போகிறது என கூட்டணி கட்சிக்காரர்கள் தலையை பிய்த்து கொண்டு நின்றனர். ஆரம்பத்திலேயே இவ்வளவு இடையூறுகளா என்று அவருடன் வந்த அதிமுக நிர்வாகிகள் புலம்பிக் கொண்டு சென்றதையும் கேட்க முடிந்தது.


அது ஒரு பக்கம் இருக்க அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு தேமுதிக சார்பில் நான்கு பேர் தவிர வேறு ஏதும் யாரும் வரவில்லை என வேட்பாளர் சிவனேசன் அப்செட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.