காவிரி நீரை பெற்றுத்தர விவசாயிகளுக்காகவும், இலங்கை கடற்படை கைதை தடுக்க மீனவர்களுக்காகவும் போராடுவேன் என இந்தியா கூட்டணி நாகை வேட்பாளர் வை.செல்வராஜ் பேட்டியளித்தார்.

 

தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள்,  நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாகை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சவளக்காரன் பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ் போட்டியிடுகிறார்.

 

இந்தியா கூட்டணி கட்சியினருடன் பேரணியாக வந்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜானி டாம் வர்கீஸ் வேட்புமனுவை சரி பார்த்துக் பெற்றுக் கொண்டார். முன்னதாக திமுக மாவட்ட அலுவலகத்தில் இருந்து  ஆட்சியர் அலுவலகம் வரை இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணியாக வந்தனர். வேட்பு மனுத்தாக்கல் அலுவலகத்திற்கு 5 நபர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றவர்களை போலீசார் 200 மீட்டர் முன்னதாகவே தடுத்து நிறுத்தினா். அதனைத் தொடர்ந்து வேட்பாளரோடு நாகை எம்பி செல்வராஜ்,  திருவாரூர் எம்எல்ஏ பூண்டிகலைவாணன், மீன்வளர்ச்சி கழகத்தலைவர் கௌதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து வை.செல்வராஜ் வேடபாளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். வை.செல்வராஜ்க்கு மாற்று வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார்.



 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிபிஐ வேட்பாளர் கூறுகையில், கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பெற்றுதரவும், நிரந்தர பயிர் காப்பீட்டு திட்டத்தை வழங்கவும் பாடுபடுவேன். இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்காக பாடுபடுவேன் என்றார். மகளிருக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிபிஐ வேட்பாளர் செல்வராஜ், செய்வதை சொல்வோம், சொல்வதை செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதை போல அதிமுகவினர் சொல்வதை செய்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் உறுதியாக சொல்வதை செய்துகாட்டுவோம் என்று உறுதியளித்தார்.