தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 19 மண்டலங்களில், பருவகால பணியாளர்களை நியமிக்க கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கடந்த ஜன. 24 ஆம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவ கால பணியாளர்களான பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் ஆகிய பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது.




இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால், கொள்முதல் பணிக்கான பணியாளர் தேர்வுக்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பை வெளியிட்டனர்.இந்நிலையில், சம்பா, தாளடி அறுவடை மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் கொட்டி வைத்து காத்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டமும், கால விரயம் ஏற்படும். மேலும் பனி வெயிலினால் நெலின் தன்மை மாறுபடும் என்பதை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிந்தது.இதனையடுத்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யவும், விவசாயிகள் பாதிக்ககூடாது என்பதை கருத்தில் கொண்டு கொள்முதல் பணிக்கான பணியாளர் நியமனத்துக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மாநில தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்றது.




இதை அடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சு.பிரபாகர், தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சிவகங்கை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள தனது சுற்றறிக்கையில், 2021-2022 ஆம் ஆண்டுக்கு நேரடி  நெல்கொள்முதல் நிலையங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி, கொள்முதல் நிலையங்களுக்கு பருவ கால பணியாளர்களை, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.



இந்நிலையில் கொள்முதல் நிலையங்கள் தடையின்றி செயல்பட தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி வழங்குமாறு கோரப்பட்டத்தில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களிலும் பட்டியல் எழுத்தர் 912, உதவியாளர் 768, காவலர் 1,034 என மொத்தம்  2,714 பருவகால பணியாளர்களை கொள்முதல் பணிக்கு தேர்வு செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  எனவே நடப்பாண்டு சந்தை பருவத்தில் கொள்முதல் பணிகள்  பாதிக்காத வண்ணம் பருவகால பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.