தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஊராட்சி தலைவர் வீடு மற்றும் அவரது உறவினர் உள்ளிட்ட 5 பேர் வீடுகளில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5ம் தேதி நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடந்தது. இதில் சட்ரஸ் சேதமடைந்தது. இதுகுறித்து திருவிடைமருதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதி நகரை சேர்ந்த சகோதரர்கள் தர்மராஜ் (32), சரண்ராஜ் (28), திருபுவனம் சந்தோஷ் (26), குருமூர்த்தி (27), பிரிதிவிராஜ்(26), ஆகிய 5 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் வெடிகுண்டு வெடித்த சட்ரஸ் பகுதி மற்றும் கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவர் முருகன், கைது செய்யப்பட்ட தர்மராஜ், சரண்ராஜ், முருகனின் அக்கா மகன் சக்திவேல், சக்திவேல் நண்பன் சரவணன் ஆகிய ஐந்து பேரின் வீடுகளில் நேற்று, திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ஜாபர் சித்திக் தலைமையில், வெடிகுண்டு கண்டறியும் நுண்ணறிவு பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசார், மோப்ப நாய்களுடன் சென்று அதிரடியாக சோதனை செய்தனர்.
 
அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக வைத்திருந்த சைக்கிள் பால்ட்ரஸ், ஆணிகள் மற்றும் பட்டாக்கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் போலீசார் வருவது குறித்து அறிந்த ஊராட்சித் தலைவர் முருகன், சக்திவேல், சரவணன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து போலீசார் வெடி பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றி தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். இதில், முருகன் உள்ளிட்ட அனைவரும் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.





இளம்பெண் தற்கொலை


தஞ்சையில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களது மகள் கற்பகம் (24). இவர் தஞ்சை சுண்ணாம்புக்காளவாய் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு ரஞ்சித்குமார் விபத்தில் இறந்து விட்டார். இந்த நிலையில் ரஞ்சித்குமாருக்கு காப்பீட்டு பணம் வந்துள்ளது. அந்த பணம் தொடர்பாக, ரஞ்சித்குமாரின் குடும்பத்தினருக்கும், கற்பகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கற்பகம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கற்பகத்தின் தாய் சந்திரா தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கற்பகத்திற்கு திருமணம் ஆகி 6½ ஆண்டுகளே ஆவதால் பணத்தகராறு அல்லது வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என தஞ்சை ஆர்.டி.ஓ. ரஞ்சித் விசாரணை நடத்தி வருகிறார்.