கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17-வது ஆண்டு நினைவு தினம் இன்று காலை அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி  இன்று காலை 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தை குழந்தைகளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

 

குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அவரவர் வீடுகளில் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும் வைத்து படையலிட்டனர். பின்னர் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த  காசிராமன் தெருவில் உள்ள பள்ளி முன்பாக, 94 குழந்தைகளின் படங்களை அச்சிடப்பட்ட பேனருக்கு மலர்களால் அலங்கரித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள், காயமடைந்த மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு 94 குழந்தைகளின் பெற்றோர்களும் பழைய பாலக்கரையில் அரசால்  அமைக்கப்பட்டுள்ள  இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்கு சென்று மாலை அணிவித்தும் பூக்களைத் தூவியும் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
  



அரசுக்கு கோரிக்கை: 

"கும்பகோணம் தீ விபத்தில்  குழந்தைகள் இறந்த பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் கூரையிலிருந்து கட்டிடங்களாக மாற்றப்பட்டது. எனவே, இறந்த குழந்தைகளின்  நினைவாக ஜூலை 16-ம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும், அன்றைய தினம் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறையும், படுகாயமடைந்த குழந்தைகள் தற்போது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்துள்ளதால் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பும் தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்". காசிராமன் தெருவில் உள்ள தீ விபத்து நிகழ்ந்த பள்ளிக்கூடத்துக்கு சென்ற தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் அங்கு இறந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்கு முன்பு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 



அப்போது பெற்றோர்களின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். குழந்தைகள் இறந்து இன்றோடு 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலை தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை மட்டுமே வைத்து வருகிறோம். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலை தரவேண்டும் என்பதே உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்கள் வைக்கும் வேண்டுகோளாக உள்ளது.