மறக்க மனம் கூடுதில்லையே... அப்படி மறந்துவிட்டால் நான் மனிதனே இல்லையே என்று தன் நிலை உயர்ந்தாலும், வந்த பாதையை மறக்காமல் இன்னும் நான் ஆட்டோக்காரன்தான் என்று காக்கிச்சட்டை அணிந்து தன் ஆட்டோவை சுத்தம் செய்து ஸ்டாண்டுக்கு கொண்டு வந்து சக ஆட்டோ நண்பர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடி இருக்கிறார் கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் சரவணன்.



எப்படி மறப்பது. மறந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா. தோல்வியின் உதவியோடு வெற்றியை நோக்கி ஒரு பயணம். அந்த பயணம் கொடுத்த மகிழ்ச்சிதான் மேயர் என்ற பதவி. வெற்றிகள், தோல்விகள் என்ற பாதையில் நாம் மறந்த பயணங்கள் வெற்றிகளாகவும் கடக்கும் பாதைகள் தோல்விகளாகவும் அமைகிறது. இது தான் வாழ்வின் நிதர்சனம். விதைத்த இடத்திலிருந்தே முளைக்க வேண்டும் என்பதுதான் இயற்கை. அப்படி தான் முளைத்த இடத்தை அதாவது ஆட்டோ டிரைவராக வலம் வந்த இடத்தை மறக்காமல் பெரிய பதவியில் இருக்கிறோம் என்று நினைக்காமல் எப்போதும் போல் நான் ஆட்டோக்காரன்தான் என நெஞ்சம் நிமிர்த்தி ஆயுத பூஜையை எப்போதும் போல் கொண்டாடி உள்ளார் இன்றைய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன்.

ஆயுத பூஜையை ஒட்டி தனது ஆட்டோவை தாமே கழுவி சுத்தம் செய்து பெரியகடை வீதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டிற்கு ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார் மேயர் சரவணன். இவரை ஆட்டோவில் காக்கிச்சட்டையும் பார்த்த மக்களுக்கு வியப்பு. ஆட்டோ ஸ்டாண்டிலோ மற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனம் முழுவதும் களிப்பு. மேயர் நம்மோடு என்ற மகிழ்வு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சாதாரண வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்ற ஆட்டோ ஓட்டுநர் சரவணனை, மேயராக்கி அழகு பார்த்த கட்சி காங்கிரஸ் என்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரியகடை வீதி ஆட்டோ ஸ்டாண்டில் பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்தவர் சரவணன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அங்கு யார் மேயராக வரக்கூடும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநரான சரவணனை மேயர் வேட்பாளராக அறிவித்தார் கே.எஸ்.அழகிரி. அனைவருமே வியந்தனர். கும்பகோணம் மேயராக பதவியேற்றுக் கொண்ட சரவணன், இன்னுமே தனது பழைய நிலைகளை மறக்காமல் எளிமையை பின்பற்றி வருகிறார். காலணி தொடங்கி ஆடைகள் வரை மேயராவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே பாணியை தான் பின்பற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





மேயராகி விட்டோம் என்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் ஆயுதபூஜையான நேற்று தனக்கு வாழ்வாதாரம் தந்த ஆட்டோவை கழுவி சுத்தம் செய்து பெரிய கடைவீதி ஆட்டோ ஸ்டாண்டிற்கு தாமே ஓட்டி வந்து சக ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களுடன் மனமகிழ்வுடன் கொண்டாடி உள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டாண்டிற்கு எனது ஆட்டோவை நானே ஓட்டிச் சென்றது மன நிறைவாக இருப்பதாக தனது வாட்ஸ் அப் ஸ்டேட்சில் தெரிவித்துள்ளார். பதவி வந்தாலே வானத்தில் பறக்கும் பலரது மத்தியில் மேயரானாலும் நான் இன்னும் ஆட்டோக்காரன்தான் என்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் எப்போதும் போல் எளிமையாக உள்ள மேயர் சரவணனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.